மேபேங் முதலீட்டு வங்கியின் சிங்கப்பூர் பிரிவில் 5% ஊழியர்கள் ஆட்குறைப்பு

மேபேங் முதலீட்டு வங்கியின் சிங்கப்பூர் பிரிவில் 5% ஊழியர்கள் ஆட்குறைப்பு

1 mins read
718437ca-9443-403d-b6e1-c034ac8709d3
படம் எஸ்டி, கெல்லி ஹுய் -

மலேசியாவின் மேபேங் அதன் மேபேங் கிம் எங் முதலீட்டு வங்கிப் பிரிவின் சிங்கப்பூர் கிளைகளில் ஐந்து விழுக்காட்டு ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளது. முதலீட்டு வங்கியின் செயல்பாட்டு முறை ஒட்டுமொத்தமாக மறுசீரமைக்கப்படுவதன் ஒரு பகுதியாக ஊழியரணி குறைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. சுமார் 30 ஊழியர்கள் ஆட்குறைப்புக்கு ஆளாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

சிங்கப்பூர் சில்லறை வர்த்தகத் தரகு, வட்டார நிறுவன விற்பனை மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றுடன் ஹாங்காங் முதலீட்டு வங்கிமுறை மற்றும் ஆலோசனை வர்த்தகம் போன்றவற்றில் மாற்றம் செய்யப்

படுவதால் ஆட்குறைப்பு அவசியமாகிறது என கடந்த வெள்ளிக்கிழமை மேபேங் கிம் எங் அறிவித்திருந்தது.

மேலும் முதலீட்டு வங்கி என்னும் கட்டமைப்பில் வாடிக்கையாளர்களின் விருப்பங்களும் முன்னுரிமைகளும் மாற்றம் கண்டுவருவதற்கு இணங்க செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் அது குறிப்பிட்டிருந்தது.

மேபேங் கிம் எங்கில் முழுநேர ஊழியர்களாக 2,000 பேர் உள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் தென்கிழக்கு ஆசியாவில் பணியாற்றி வருவதாகவும் அறியப்படுகிறது. சிங்கப்பூரில் மட்டும் 600 பேர் வேலை செய்வதாகத் தெரிகிறது. அவர்களில் கிட்டத்தட்ட 400 பேர் முழுநேர ஊழியர்கள்.

மறுசீரமைப்பு நடவடிக்கையால் தனது மொத்த ஊழியரணியில் 3 விழுக்காட்டுப் பேர் பாதிக்கப்படுவர் என்று மேபேங் கிம் எங் தெரிவித்துள்ளது.