தனியார் வீடுகளின் மறுவிற்பனை விலையில் சரிவு

தனியார் வீடுகளின் மறுவிற்பனை விலையில் சரிவு

1 mins read
6d3239d7-07a6-401a-95cd-1a87e0b356ae
படம்: எஸ்டி -

சிங்கப்பூரில் தனியார் தரை வீடுகளின் மறுவிற்பனை விலைகள் சென்ற மாதம் சற்று குறைந்ததாக எஸ்ஆர்எக்ஸ் சொத்துச் சந்தை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக ஏற்றம் கண்ட பின்னர் நவம்பரில் விலைகள் குறைந்தன.

கொன்டோமினியம் எனப்படும் கூட்டுரிமை வீடுகளின் மறுவிற்பனை விலை அக்டோபரைக் காட்டிலும் 0.1 விழுக்காடு சரிந்தது.

அதற்கு முன்னர் அக்டோபரில் 0.8 விழுக்காடு விலை ஏற்றம் இருந்தது. கடந்த நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் சென்ற மாத விலை வீழ்ச்சி 1.5 விழுக்காடாக இருந்தது.

சென்ற மாதம் விற்பனை ஆன தனியார் வீடுகளின் எண்ணிக்கையும் 7.2 விழுக்காடு குறைந்து 801 ஆக இருந்தது. அக்டோபரில் 863 வீடுகள் விற்பனை ஆயின.

இருப்பினும் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தைக் காட்டிலும் 25 விழுக்காடு அதிகமான வீடுகள் கடந்த மாதம் விற்கப்பட்டன.

அதேபோல நவம்பர் மாதத்துக்கான ஐந்தாண்டு சராசரி எண்ணிக்கையிலும் 10.7 விழுக்காடு வீடுகள் அதிகம் விற்பனை ஆனதாக எஸ்ஆர்எக்ஸ் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய வட்டாரத்தில் உள்ள வீடுகளின் விலைகள் மட்டும் அக்டோபரைக் காட்டிலும் கடந்த மாதம் 1 விழுக்காடு இறங்கின.

எஞ்சிய பகுதிகளின் தனியார் வீட்டு விலைகளில் 0.8 விழுக்காடு சரிவு காணப்பட்டது.

நவம்பரில் மறுவிற்பனை ஆன வீடுகளிலேயே 'ஹில்டாப்ஸ்' வீட்டின் விலை ஆக அதிகமாக $25.08 மில்லியனுக்கு விற்கப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது