இருவரின் சார்பில் குற்றவியல் அவதூறு வழக்கில் வாதிட எம். ரவி விண்ணப்பம்

இருவரின் சார்பில் குற்றவியல் அவதூறு வழக்கில் வாதிட எம். ரவி விண்ணப்பம்

2 mins read
a8e2ecb2-8617-4b96-9ab5-22685ae16302
(இடமிருந்து) வழக்கறிஞர் ரவி, திரு டேனியல் டி கோஸ்டா, திரு டெர்ரி சூ. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டிருக்கும் அனைவரும் சமம் என்ற உரிமைக்கு எதிராக திரு டேனியல் டி கோஸ்டா மீது தொடுக்கப்பட்டிருக்கும் குற்றவியல் அவதூறு வழக்கில் அவருக்காக வாதிட வழக்கறிஞர் எம். ரவி விண்ணப்பித்து உள்ளார்.

'தி ஆன்லைன் சிட்டிசன்' சமூக அரசியல் இணையத் தளத்தில் வெளியான கட்டுரை ஒன்றின் தொடர்பில் திரு டி கோஸ்டாவின் மீது கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பரில் திரு டி கோஸ்டா அமைச்சரவை உறுப்பினர்கள் பற்றி ஒரு மின்னஞ் சலை 'தி ஆன்லைன் சிட்டிசன்' இணையத்தளத்துக்கு அனுப்பினார். அந்தக் கட்டுரை இணையத்தளத்தில் பிரசுரமா கும் என்று டி கோஸ்டா அறிந்திருந்தார் என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறின. அந்த இணையத் தளத்தின் ஆசிரிய ரான திரு டெர்ரி சுவின் மீதும் அதே குற்றச்சாட்டு பாய்ந்தது.

இது பற்றி கருத்துரைத்த திரு ரவி, "அந்தச் சமயத்தில் பிரதமர் லீ சியன் லூங்கின் உடன்பிறந்தவர்களான டாக்டர் லீ வெய் லீங்கும் திரு லீ சியன் யாங்கும் இதேபோன்ற அல்லது இதைவிட மோசமான அவதூறுகளை அமைச்சரவை உறுப்பினர்களில் ஒருவரான பிரதமர் லீ மீது சுமத்தினர். அவதூறு என்று சாட்டப்படும் இரு தரப்பினரின் சம்பவங்களில் திரு சூவும் திரு டி கோஸ்டாவும் கூறியது அவதூறு என்றால், ஏன் பிரதமரின் உடன்பிறப்புகள் கூறிய அவதூறுக்காக அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் இது அரசமைப்புச் சட்டத்தின் 12வது பிரிவில் கூறப்பட்டிருக்கும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கூறப்பட்டிருப்பதற்கு புறம்பாக உள்ளது," என்றும் வாதிட்டார்.

"12வது பிரிவு சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்றும் அனைவருக்கும் சட்டத்தில் சரிசமமான பாதுகாப்பு உண்டு என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் பிரதமர் லீயின் உடன்பிறப்புகளின் அவதூறு இன்னும் நேரடியானவை, இன்னும் கடு மையானவை," என்றும் திரு ரவி சுட்டினார்.