புதிய எம்ஆர்டி வரைபடத்திற்கு நல்ல வரவேற்பு

புதிய எம்ஆர்டி வரைபடத்திற்கு நல்ல வரவேற்பு

2 mins read
0fe3a77a-40fa-4347-a825-89aaf9881779
கடந்த புதனன்று வெளியிடப்பட்ட புதிய 'எம்ஆர்டி கட்டமைப்பு' வரைபடம். படம்: நிலப் போக்குவரத்து ஆணையம் -

புதிய 'எம்ஆர்டி கட்டமைப்பு வரைபடத்திற்கு' இணையவாசிகள் பொதுவாக நல்ல வரவேற்பு அளித்துள்ளனர்.

கடந்த புதன்கிழமையன்று இந்தப் படம் வெளியிடப்பட்டது. அடுத்த மாதம் 31ஆம் தேதி தாம்சன் - ஈஸ்ட் கோஸ்ட் பாதை திறக்கப்படும்போது இந்தப் புதிய வரைபடமும் அறிமுகம் காணும்.

அதற்குமுன் ஜனவரி 11ஆம் தேதி நடக்கவிருக்கும் பொதுத் திறப்பு நிகழ்ச்சியில் பொதுமக்கள் புதிய வரைபடத்தைக் காணலாம்.

அழகாக, அற்புதமாக, துல்லியமாக இருக்கிறது, புதிய வரைபடத்தை வெளியிட இதுவே சரியான தருணம் என்றெல்லாம் இணையவாசிகளில் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

மற்ற பாதைகளுக்கெல்லாம் இதயமாக இருப்பது போன்று வட்டப் பாதை காட்டப்பட்டிருப்பது தமது மனதைக் கவர்வதாக உள்ளது எனக் கூறியுள்ளார் திருவாட்டி எம்மி அப்துல் ஆலிம்.

வட்டப் பாதை நிலையங்கள் நல்ல இடைவெளியுடன் காட்டப் பட்டுள்ளதைச் சுட்டிய வரைகலை வல்லுநர் கேமரன் பூத், 'கேப்லட்' மாத்திரை வடிவில் நிலைய எண்கள் குறிப்பிடப்பட்டிருப்பது சிறப்பான வடிவமைப்பு எனப் புகழ்ந்தார். இருப்பினும், ஜூரோங் வட்டார ரயில் பாதை வரும்போது புதிய வரைபடத்திற்குச் சிக்கல் ஏற்படலாம் என்றார் அவர்.

இப்போதைய வரைபடமே மேம்பட்டதாக இருக்கிறது என்று ஒரு சிலர் கூறியுள்ளனர்.

புதிய வரைபடத்தில் காணப்படும் வளைவுகளும் ஆரங்களும் இப்போதைய வரைபடத்தில் உள்ள நேர்கோடுகளைக் காட்டிலும் பார்வையைக் கவர்வதாக இல்லை என்பது அவர்களின் கருத்து.

வடக்கு - தெற்கு, கிழக்கு - மேற்கு என இரு பாதைகளுடன் கடந்த 1987ஆம் ஆண்டில் சிங்கப்பூர் எம்ஆர்டி சேவை தொடங்கியது.

இதனிடையே, முதற்கட்டமாக உட்லண்ட்ஸ் நார்த், உட்லண்ட்ஸ், உட்லண்ட்ஸ் சௌத் என மூன்று நிலையங்களுடன் ஜனவரி 31ஆம் தேதியிலிருந்து தாம்சன் - ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை செயல்படத் தொடங்கும்.