வடகிழக்கு வட்டாரத்தில் விழாக்கால மகிழ்ச்சி ஏற்படுத்திய தொண்டூழியர்கள்

வடகிழக்கு வட்டாரத்தில் விழாக்கால மகிழ்ச்சி ஏற்படுத்திய தொண்டூழியர்கள்

2 mins read
dd83001c-1862-4561-a663-dd15bccca552
அல்ஜுனிட் குழுத்தொகுதி அடித்தள அமைப்புகளுக்கான ஆலோசகர் திரு விக்டர் லீ, தெம்பனிஸ் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் வடகிழக்கு சமூக மேம்பாட்டு மன்ற மேயருமான டெஸ்மண்ட் சூ இருவரும் தை ஹுவா குவான் தாதிமை இல்லத்தில் வசிப்போருக்கு விழாக்கால அன்பளிப்பை வழங்கினர். படம்: வடகிழக்கு சமூக மேம்பாட்டு மன்றம் -

தேசிய தொழிற்சங்கத்தின் இளையர் பிரிவின் 'புரோஜெக்ட் ரீஃபிரெஷ்' திட்டத்தின் கீழ் 600 இளம் தொண்டூழியர்கள் நேற்று வசதி குறைந்தவர்களின் வீடுகளுக்குச் சாயம் பூசினர்; இல்லங்களுக்குச் சென்று அன்பளிப்புகளை வழங்கினர்.

ஆண்டுக்கு நான்கு முறை பண்டிகை காலங்களின்போது இந்த ஊழியர்கள் பாதிக்கப்படக்கூடிய அபாயத்திலுள்ள முதியவர்கள் வீடுகளுக்கும் அவர்கள் வசிக்கும் தாதிமை இல்லங்களுக்கும் சென்று அங்கு மகிழ்ச்சியைக் கொண்டு வருவர்.

வடகிழக்கு சமூக மேம்பாட்டு மன்றத்தில் இணைந்து இந்தத் தொண்டூழிய நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழக மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த தொண்டூழியர் படை வடகிழக்கு வட்டாரத்திலுள்ள மொத்தம் 33 அடுக்குமாடி வீடுகளுக்கும் மூன்று முதியோர் நடவடிக்கை நிலையங்களுக்கும் சென்று முதியோருடன் நேரம் செலவிட்டனர். அவர்களுக்கு விழாக்கால அன்பளிப்புகளை வழங்கினர். தை ஹுவா குவான் தாதிமை இல்லத்துக்கும் அவர்கள் சென்று முதியோரை மகிழ்வித்தனர்.

இந்த நடவடிக்கையில் அதிகளவில் தொண்டூழியர்கள் பங்கேற்றனர் என்று தெம்பனிஸ் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் வடகிழக்கு சமூக மேம்பாட்டு மன்ற மேயருமான டெஸ்மண்ட் சூ தெரிவித்தார்.

சமூகத்தின் பல்வேறு தரப்புகளையும் சேர்ந்த இளையர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்த விரும்பினோம். ஓர் எளிமையான காரியத்தைச் செய்ய நினைத்தோம்.

பயனுள்ள வகையில் பங்களிக்கக்கூடிய இடத்தைக் கண்டறிவது சிரமமாக இருப்பதை பலரும் அறிந்தனர். எனவே, ஏதாவது செய்யலாம் என நாங்கள் முடிவெடுத்தோம் என்று கூறினார் திரு டெஸ்மண்ட் சூ.

'புரோஜெக்ட் ரீஃபிரெஷ்' திட்டத்தில் பட்டக்கல்வி மாணவியாகச் சேர்ந்த குமாரி அஸ்லி லீ, 23, தொண்டூழியப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

"இதற்கு அதிகம் நேரம் தேவையில்லை. மற்றவரை மகிழ்ச்சிப்படுத்தும் போது நாமும் மகிழ்கிறோம்," என்றார் அவர்.