திரு ராய்டன் லிம் தமது சிறு வயதில் ‘ஹேலோ’ போன்ற இணைய விளையாட்டுகளில் நாளொன்றுக்கு 10 மணிநேரம் செலவிடுவார்.
தம்மைச் சுற்றியுள்ள வாழ்க்கைச் சூழலிலிருந்து விடபட இவர் விளையாட்டுகளில் கவனம் செலுத்தினார். ஆனால், அது அவரது குடும்ப உறவுகளை பாதிப்பதாக அமைந்துவிட்டது. அவர் தமது பெற்றோருடன் இது தொடர்பாக நீண்ட சர்ச்கையில் ஈடுபட்டார். அத்துடன், கனத்த வார்த்தைகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
இதில் தமது பெற்றோருக்கு, தனது கூடப்பிறந்த இருவருடன் ஒப்பிடும்போது, தம்மீது உண்மையிலேயே அன்பு இருக்கிறதா என்று அவர்களைப் பார்த்துக் கேட்குமளவிற்கு சென்றுவிட்டார் ராய்டன் லிம்.
அந்த வாக்குவாதம் அவருக்கு உண்மையிலேயே ஓர் எழுச்சிச் குரலாக விளங்கியது. அவருடைய கேள்விக்கு பதிலளித்த அவரது பெற்றோர், “உனது உடன்பிறப்புகளைக் காட்டிலும் உன்மீது எங்களுக்கு அன்பு குறைவு என்பதில்லை.
“ஆனால், நீ எங்களுடன் அதிக நேரம் இருப்பதில்லை,” என அவர்கள் பதிலளித்தனர் என்று ராய்டன் லிம் கூறுகிறார். இந்தச் சம்பவம் அவரது வாழ்க்கையை மாற்றி அமைத்தது.
இதன்பின் அவர் தொலைக்காட்சி ஆவணப் படங்கள் பார்ப்பதிலும் விலங்குகள் பற்றி படிப்பதிலும் அதிக நேரம் செலவிடத் தொடங்கினார்.
இந்த 21 வயது தேசிய சேவையாளர் இன்னமும் இணைய விளையாட்டுகளில் ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்.
இதனால், நேற்று தெம்பனிஸ் ஹப்பில் கிட்டத்தட்ட 120 பேர் பங்குபெற்ற இணைய விளையாட்டுப் போட்டி ஒன்றில் இவர் கலந்துகொண்டார்.
வடகிழக்கு சமூக மேம்பாட்டு மன்றமும் ‘கேர் கார்னர் யூத் கோ’ என்ற அமைப்பும் இணைய விளையாட்டுகளுக்கு அடிமையாவது தொடர்பாக மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஓர் அங்கமாக ஏற்பாடு செய்த இந்த இணைய விளையாட்டுப் போட்டியில் 13 வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியின் பங்காளிகளாக செயல்பட்ட சிங்கப்பூர் மனநல சங்கம், டச் சமூக சேவை அமைப்பும் மனநல சுகாதார சேவைகளை அறிமுகப்படுத்தும் விதமாக விளையாட்டுப் மையங்களை அமைத்தன.
மனநல விழிப்புணர்வு கருத்தரங்கை வழிநடத்திய “டச் சைபர் வெல்நஸ்’ அமைப்பின் தலைவர் ஷெம் யாவ், இணைய விளையாட்டுகளுக்கு அடிமையாகும் நிலை குறித்து பெற்றோரே முதன் முதலில் கண்டறிவதாகத் தெரிவித்தார்.