நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவி தாக்கப்பட்டதாக போலிசுக்குத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலிசார் சனிக்கிழமை இரவு அந்த வளாகத்திற்குச் சென்றனர்.
ஆனால் அப்படி எந்தவொரு சம்பவமும் அங்கு நிகழவில்லை என்பது போலிசுக்குத் தெரிந்தது.
இதனையடுத்து போலிசிடம் பொய்த் தகவல் தெரிவித்ததன் தொடர்பில் அந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் விசாரிக்கப்பட்டு வருவதாக அறிக்கை ஒன்றில் போலிஸ் தெரிவித்தது.
இந்த விவகாரம் பற்றி கருத்து தெரிவிக்காமல், யூகச் செய்திகள் எதையும் வெளியிடாமல் இருக்கும்படி பொதுமக்களை போலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அப்படிச் செய்தால் தேவையில்லாமல் அச்சம் ஏற்படக்கூடும் என்று போலிஸ் கூறியது.
இதனிடையே, போலிஸ் புலன்விசாரணையில் இந்தப் பல்கலைக் கழகம் உதவி வருவதாக அதன் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
இந்தப் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு தொடர்பில் யாருக்கும் எந்த அச்சமும் தேவையில்லை என்பது உறுதி என அந்தப் பேச்சாளர் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
பல்கலைக்கழகம் மாணவர்களை அணுகி அவர்களுக்குத் தேவையான ஆதரவுகளை அளித்து வருவதாகவும் பேச்சாளர் கூறினார்.
முன்னதாக, பல்கலைக்கழக வளாகத்தில் இருப்பவர்களைத் தங்கள் அறைக்குள்ளேயே இருந்துகொள்ளும்படி மாணவர் சங்கம் வலியுறுத்தி இருந்தது.
ஆனால் அப்படிப்பட்ட தாக்குதல் சம்பவம் எதுவும் நிகழவில்லை என்றும் எல்லா மாணவர்களும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதை அறிந்து தான் நிம்மதி அடைந்ததாகவும் சங்கம் பிறகு கூறியது.
யூகச் செய்திகளும் போலித் தகவல்களும் படுமோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதால் செய்திகளின் உண்மை நிலையை அறிந்து செயல்படும்படி மாணவர்களைச் சங்கம் வலியுறுத்தியது.