உள்ளூர் நிபுணர்கள், நிர்வாகிகள், மேலாளர்கள், தொழில்நுட்பர்கள் ஆகியோரின் வேலை நியமன விவகாரம் தொடர்பான மூன்று இணையப் பதிவுகள் தொடர்பில் அரசாங்கம் பிறப்பித்த சரியாக்க உத்தரவுகளுக்குச் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி நேற்று கீழ்ப்படிந்தது.
இருந்தாலும் அத்தகைய உத்தரவுகளை ரத்து செய்யுமாறு கேட்டு விண்ணப்பிக்க தான் திட்டமிடுவதாகவும் அந்தக் கட்சி கூறியது. ஜனநாயகக் கட்சி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ முகவரி இடப்பட்ட ஒரு கடிதத்தில் தன் தரப்பு வாதத்தை நேற்றும் தொடர்ந்தது.
இணையவழிச் பொய்ச்செய்திக்கும் சூழ்ச்சித்திறத்துக்கும் எதிரான பாதுகாப்புச் சட்ட (பொஃப்மா) அலுவலகம், அமைச்சர் திருவாட்டி டியோவின் கட்டளையின் பேரில் அந்த உத்தரவுகளை அக்கட்சிக்கு அனுப்பியது.
“அந்தச் சட்டத்தின் கீழ் நாங்கள் உத்தரவுக்கு கீழ்ப்படியத்தான் வேண்டும். ஆனால் சரியாக்க உத்தரவுகளை ரத்துசெய்யுமாறு நாங்கள் விண்ணப்பிக்கப் போகிறோம்,” என்று ஜனநாயகக் கட்சி கூறியது.
மேலே குறிப்பிடப்பட்ட உள்ளூர் ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்துவிட்டதாக தெரிவித்த ஜனநாயகக் கட்சியின் இணையக் கட்டுரை ஒன்றையும் அதன் இரண்டு ஃபேஸ்புக் பதிவு களையும் சரிப்படுத்தும்படி அந்தக் கட்சி கேட்டுக்கொள்ளப்பட் டது.
அப்படி அந்தக் கட்சி கூறிய தகவல்கள் தவறு என்றும் அந்த ஊழியர்களுக்கான வேலை வாய்ப்புகள் 2015 முதல் அதிகரித்து இருப்பதாகவும் மனித வள அமைச்சு விளக்கியது.