அமெரிக்காவின் 44வது அதிபராக பதவி வகித்த பராக் ஒபாமா, சனிக்கிழமை இரவு சிங்கப்பூரில் நடந்த அறப்பணி விருந்து ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் பங்கெடுத்தார். போலியான தகவல்கள், பருவநிலை மாற்றம், இளைஞர்களின் செயல்பாடு ஆகியவை பற்றி அவர் தன் கருத்துகளை வெளியிட்டார்.
போலிச்செய்திகள் பரவுவதைத் தடுப்பதில் அரசாங்கங்களுக்கு பங்கு இருப்பதாகக் குறிப்பிட்ட ஒபாமா, ஆனால் ஒரு செய்தி உண்மையா, பொய்யா என்பதை தீர்மானிக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு மட்டும் உரியதாக இருக்கக்கூடாது என்று தெரிவித்தார்.
எந்தெந்த செய்திகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும், எவற்றை மக்கள் காணவேண்டும் என்பதை முடிவு செய்வதில் ஊடக நிறுவனங்களுக்கும் பொறுப்பு இருக்கிறது என்றாரவர்.
பொய்ச்செய்திகளை அடையாளம் கண்டு தடுப்பது ஒரு சவால் என்று குறிப்பிட்ட அவர், ஒரு செய்தி உண்மையா, பொய்யா என்பதை முடிவு செய்வதில் நீதித்துறையும் இதர சுயேட்சையான அமைப்புகளும் பங்காற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
போலிச்செய்திகள் பரவுவது உண்மையிலேயே ஒரு பிரச்சினை என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டியது மிக முக்கியமானது என்றும் முன்னாள் அதிபர் கூறினார்.
நொவினா குளோபல் லைஃப் கேர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த அந்த விருந்தில் திரு ஒபாமா முக்கிய உரையாற்றினார்.
பருவநிலை மாற்றங்களைச் சமாளிக்க அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளை பற்றி குறிப்பிட்ட அவர், பொதுமக்களின் கருத்துகளை வைத்து அரசியல்வாதிகள் பல மாற்றங்களையும் செய்து வருவதாகத் தெரிவித்தார்.
ஆனால் இதற்கு சிங்கப்பூர் ஓர் அரிய விதிவிலக்கு என்று கூறிய அவர், இந்தப் பிரச்சினையை அங்கீகரித்து சிங்கப்பூர் விவேகமான வழியில் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தெரிவித்தார்.
இதில் இளைஞர்களின் பங்கு பற்றி கருத்துரைத்த ஒபாமா, இளைஞர்கள் மக்களுக்குப் பலவற்றையும் போதிக்க வேண்டும் என்றார்.
திரு ஒபாமாவுடன் திருமதி ஒபாமாவும் சனிக்கிழமை சிங்கப்பூர் வந்திருந்தார்.
வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கும் சமூகத்தில் பாதிக்கப்பட்டு உள்ள மாதர்களுக்கும் கல்வி, பயிற்சி உதவிகளை வழங்கும் சிங்கப்பூரின் நான்கு அறப்பணி அமைப்புகளுக்கு நிதி திரட்டி உதவுவதற்காக சனிக்கிழமை அந்த விருந்து நிகழ்ச்சி இடம்பெற்றது.
அதற்கு முன்னதாக திரு ஒபாமா, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கைச் சந்தித்தார்.
“திரு ஒபாமாவும் திருமதி ஒபாமாவும் சிங்கப்பூரிலும் அதிக நேரத்தைச் சேர்ந்து செலவிட்டதைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது.
“அடுத்த சந்திப்புக்கு ஆவலுடன் காத்திருக்கிறோம்,” என்று ஃபேஸ்புக் பக்கத்தில் பிரதமர் லீ தெரிவித்துள்ளார்.