மலேசியாவுக்கு இம்மாதம் 14ஆம் தேதி காரில் பயணம் மேற்கொண்ட பெற்றோர் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் உள்ள குளுவாங் ஓய்விடத்தில் அமைந்திருக்கும் பெட்ரோல் நிலையத்தில் தங்கள் ஐந்து மகனை விட்டுவிட்டு பயணத்தைத் தொடர்ந்தனர்.
பெட்ரோல் நிலையக் கழிவறையில் அந்த ஐந்து வயது பையன் தன் தாயாரைக் காணாமல் அழுதுகொண்டிருந்தான். அதைப் பார்த்த பெட்ரோல் நிலையத்தின் ஊழியரான ஸம்மால், பையனின் பெற்றோரைத் தேடினார். ஆனால், அவர்கள் அங்கில்லை.
பின்னர் அந்தப் பையனை பெட்ரோல் நிலையத்தின் ஊழியர் அறைக்கு அழைத்துச் சென்று அவனது அழுகையை நிறுத்த ஐஸ்கிரீமும் குளிர் பானமும் கொடுத்தனர்.
“இதன் தொடர்பில் போலிசுக்குத் தகவல் கொடுத்துவிட்டு, பையனின் பெற்றோர் அவனைத் தேடி வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் அந்தப் பையனை நாங்கள் பத்திரமாக வைத்துக்கொண்டோம்,” என்று பெட்ரோல் நிலையத்தின் நிர்வாகி லியன்ஹ வான்பாவ் சீன நாளிதழிடம் தெரிவித்தார்.
பையனின் பெயர், வயது ஆகியவற்றைத் தவிர மற்ற விவரங்கள் தெரியாத காரணத்தால் பெட்ரோல் நிலைய ஊழியர்கள் பையனின் படத்தை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்து அவனது பெற்றோரைத் தேட உதவும்படி கேட்டுக்கொண்டனர்.
குளுவாங் பெட்ரோல் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற அந்தப் பெற்றோர் இரண்டு மணிநேரம் கழித்துதான் தங்கள் மகன் காருக்குள் இல்லை என்பதைத் தெரிந்துகொண்டு, போலிசில் புகார் கொடுத்தனர்.
அதே இரவன்று மகனைத் தொலைத்த இடத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அந்தப் பெற்றோரிடம் சிறுவனை போலிசார் ஒப்படைத்தனர்.
காணாமல் போன சிறுவன் சிங்கப்பூரர் என்பதை போலிசார் உறுதிப்படுத்தினர்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity