சிங்கப்பூரில் இந்த ஆண்டில் நடப்புக்கு வந்த முக்கியமான கொள்கை மாற்றங்களைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய கூடுதல் தேவைகளை ஈடுசெய்யும் வகையில் 2020ல் சுமார் 16,000 முதல் 17,000 தேவைக்கேற்ப கட்டும் (பிடிஓ) வீடுகள் விற்பனைக்கு வரும்.
தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்று தமது வலைப்பதிவில் இந்தத் தகவலை வெளியிட்டார். செம்பவாங், தோ பாயோவில் அடுத்த பிப்ரவரியில் புதிய வீடுகள் கிடைக்கும். சுவா சூ காங், தெங்கா, பாசிர் ரிஸ், தெம்பனிஸ் ஆகியவற்றில் மே மாதம் புதிய பிடிஓ வீடுகள் விற்பனைக்கு விடப்படும்.
முதல் தடவையாக வீடு வாங்க தகுதி உடையோருக்கு வருமான உச்ச வரம்பை செப்டம்பர் மாதம் தேசிய வளர்ச்சி அமைச்சு உயர்த்தியது. அதோடு, புதிய மேம்படுத்தப்பட்ட மத்திய சேம நிதி வீட்டு மானியத் திட்டம் ஒன்றையும் அமைச்சு அறிமுகப்படுத்தியது.
பல இளைய தம்பதியினர் முதல் முறையாக வீவக புதிய வீட்டை வாங்கும்போது $80,000 வரை மானியத்தைப் பெறுவார்கள். வெளிச் சந்தையில் மறுவிற் பனை வீட்டை அவர்கள் வாங்கினால் $160,000 மானியம் கிடைக்கும்.
வீவக அடுக்குமாடி வீடுகள், எக்ஸிகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகள் ஆகியவற்றுக்கான வருமான உச்ச வரம்பு $2,000 கூட்டப்பட்டு முறையே $14,000 மற்றும் $16,000 ஆக உயர்த்தப்பட்டது. இந்த மாற்றங்கள் காரணமாக வீவக வீடுகளுக்கு அதிக தேவை ஏற்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்த ஆண்டு 14,600 பிடிஓ வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டு உள்ளன. அடுத்த ஆண்டு இதைவிட அதிகமான வீடுகள் விற்பனைக்குக் கிடைக்கும். கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் கிட்டத்தட்ட 150,000 குடும்
பங்கள் தங்களுடைய முதல் வீவக வீட்டுக்கு முன்பதிவு செய்திருக்கின்றன. அல்லது வீட்டுச் சாவியைப் பெற்றிருக்கின்றன. இப்படி முதல் தடவையாக வீடு வாங்கியோரில் பலரும் பொங்கோல், செங்காங், தெங்கா போன்ற முதிர்ச்சி அடையாத பேட்டைகளில் வீடுகளை வாங்கி இருக்கிறார்கள் என்று தெரிவித்த அமைச்சர், அந்தப் பேட்டைகளில் உள்ள வீடுகளின் விலையை தாராளமான தள்ளுபடியுடன் அரசாங்கம் நிர்ணயித்ததாகக் கூறினார். இதன் காரணமாக வீடு வாங் கும் பெரும்பாலானவர்கள் வீடு வாங்குவதற்காகச் செலவிட்ட தொகை மிகவும் குறைவு. அல்லது அறவே இல்லை என்று அமைச்சர் தெரிவித்தார். புதிய வீடுகளைக் கட்டுவது ஒருபுறம் இருக்க, வீவக பேட்டைகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் பெரும் பணத்தை முதலீடு செய்கிறது என்று தெரிவித்த அமைச்சர், கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்காக அரசு சுமார் $3 பில்லியன் தொகையைச் செலவிட்டு இருக்கிறது என்பதைச் சுட்டினார்.
வரும் ஆண்டுகளில் இன்னும் சிறந்த, பசுமைமிக்க, விவேகமான வீடுகளை எல்லா வீவக பேட்டைகளிலும் ஏற்படுத்தித் தரும் வகையில் தொடர்ந்து அரசாங்கம் பல முயற்சிகளையும் எடுத்து வரும் என்றார் அவர்.
முதிய வீவக நகர்களை மறுஉருவாக்கம் செய்வதற்கான ‘வெர்ஸ்’ (Vers) திட்ட அமலாக்க விவரங்களை அரசாங்கம் உருவாக்கி வருவதாகவும் அவை தயாரானதும் அறிவிக்கப்படும் என்றும் தேசிய வளர்ச்சி அமைச்சர் வோங் தெரிவித்துள்ளார்.