சிங்கப்பூரின் தற்காப்புப் படை முழுமைக்கும் ஆதிக்கம் செலுத்தி ஓய்வுபெற்ற 78 வயது ஜெனரல் வின்ஸ்டன் சூவின் குடும்பம் மூன்று தலைமுறையாக ராணுவ ஈடுபாடுள்ள குடும்பம் என்ற பெருமையுடன் திகழ்கிறது.
சிங்கப்பூர் ஆயுதப்படையில் ஓர் அதிகாரியாகப் பதவி வகித்த வாரன் சூ, 49, ஜெனரல் வின்ஸ்டன் சூவின் புதல்வர் ஆவார்.
திரு வாரன் சூவின் புதல்வரான டேனியல் சூ, 19, இப்போது இரண்டாவது லெஃப்டினண்ட் ஆக இருக்கிறார். சிங்கப்பூர் ஆயுதப் படை ராணுவக் கழகத்தில் அதிகாரிகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அதில் 418 அதிகாரிகள் சிங்கப்பூர் ஆயுதப் படையில் தங்கள் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர்.
அந்த அதிகாரிகளில் இரண்டாவது லெஃப்டினண்ட் அதிகாரி சூவும் ஒருவர். அதிகாரிகள் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் அதிபர் ஹலிமா யாக்கோப் கலந்துகொண்டார்.
சிறிய நாடான சிங்கப்பூர், உலகம் எப்படியோ அப்படியே அதை ஏற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது என்றும் நாம் விரும்பியது போல் உலகத்தை மாற்ற முடியாது என்றும் அதிபர் தெரிவித்தார்.