பெர்தாவ்ஸ் என்ற முஸ்லிம் தொண்டூழிய நல்வாழ்வு நிறுவனம், சுவா சூ காங்கில் இருக்கும் தன்னுடைய குழந்தைப் பராமரிப்பு நிலையத்தை விரிவுபடுத்தி இருக்கிறது. தேவை கூடி இருப்பதைக் கருத்தில் கொண்டு அது இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
விரிவுபடுத்தப்பட்ட நிலையம் இப்போது 172 பிள்ளைகளுக்குச் சேவையாற்றுகிறது. முன்பு 90 சிறார்களை அது பராமரித்தது. பல வயது பிரிவைச் சேர்ந்த பிள்ளைகளைப் பராமரிக்கும் வகையில் தன்னுடைய சேவைகளையும் அந்த நிறுவனம் விரிவுபடுத்தி இருக்கிறது.
முன்பு மூன்று முதல் ஆறு வயதுள்ள பிள்ளைகளைப் பராமரித்து வந்த அந்த நிலையம் இப்போது மூன்று வயது வரை உள்ள பாலர்களையும் பராமரிக்கும். சுவா சூ காங் நிலையத்தில் சேர்வதற்கு 300 குழந்தைகள் காத்திருக்கின்றன. தேவை கூடிவிட்டது என்று பெர்தாவ்ஸ் தலைவர் ஸைத்தோன் முகம்மது அலி தெரிவித்தார்.
இந்த நிலையத்தில் இப்போது 20க்கும் அதிக ஆசிரியர்கள் வேலை பார்க்கிறார்கள். சிறப்பு உதவி தேவைப்படும் சிறார்களுக்கும் இது சேவையாற்றுகிறது. எல்லா இன, சமயங்களைச் சேர்ந்த பிள்ளைகளும் இங்கு சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.
பொதுவான சிறார் பராமரிப்பு பாடத்திட்டமே இங்கு பின்பற்றப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.