சிங்கப்பூரில் நவம்பர் மாதம் புதிய தனியார் வீடுகள் விற்பனை சூடுபிடித்தது. ஆண்டு முடிவில் விற்பனைக்கு விடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அதிக வீடுகள் கைமாறியதாக நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
எக்ஸிகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளைத் தவிர்த்துப் பார்க்கையில், சென்ற மாதம் 1,147 புதிய தனியார் வீடுகள் விற்கப்பட்டன. கடந்த அக்டோபரில் இந்த எண்ணிக்கை 931 ஆக இருந்தது. சென்ற ஆண்டு நவம்பரில் 1,201 வீடுகள் விற்பனையாயின. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் நவம்பரில் புதிய தனியார் வீடுகள் விற்பனை 23.2 விழுக்காடு கூடி இருக்கிறது.
எக்ஸிகியூட்டிவ் கூட்டுறவு வீடுகளையும் சேர்த்துப் பார்த்தால் நவம்பரில் மொத்தம் 1,168 வீடுகள் விற்பனையாயின என்பது தெரியவருகிறது. இந்த எண்ணிக்கை அக்டோபரில் 958 வீடுகளாக இருந்தது.
சென்ற ஆண்டு நவம்பருடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு நவம்பரில் இந்த விற்பனை மூன்று விழுக்காடு குறைந்தது.
வீடுகளைக் கட்டி விற்கும் நிறுவனங்கள் சென்ற மாதம் 740 தனியார் வீடுகளை விற்பனைக்குக் கொடுத்தன. அக்டோபரில் விற்பனைக்கு வந்த புதிய வீடுகளின் எண்ணிக்கை 892. சென்ற மாதம் எக்ஸிகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகள் புதிதாக விற்பனைக்கு எதுவும் வரவில்லை.
விற்பனைக்கு விடப்பட்டு ஆனால் விற்பனையாகாமல் இருந்த தனியார் வீடுகளின் மொத்த எண்ணிக்கை 4,375 ஆக இருக்கிறது. எக்ஸிகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை 4,748 ஆகும்.