தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புக்கிட் பாத்தோக் பாலர் பள்ளியில் ஒருவருக்கு காசநோய்

1 mins read
8fbe1f5d-2599-42cf-aa57-ce053b1d0887
தொடர் இருமல், மூச்சுவிடும்போது அல்லது இருமும்போது நெஞ்சில் வலி, சோர்வு, காய்ச்சல், பசியின்மை போன்றவை காச நோய்க்கான அறிகுறிகள். படம்: ஏஎஃப்பி -

புக்கிட் பாத்தோக்கில் உள்ள பாலர் பள்ளி ஒன்றில் ஒருவருக்கு காசநோய் கண்டறியப்பட்டதை அடுத்து, அப்பள்ளியில் பயிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களும் அங்கு பணிபுரியும் ஊழியர்களும் காசநோய்க்காக பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த நபருக்கு தொற்றுநோயான காசநோய் இருப்பது கண்டறியப்பட்ட உடனே அவருக்கு மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டதாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சு பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மாணவர்கள், ஊழியர்களிடம் நடத்தப்பட்ட காச நோய்ப் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை என்று அவர் கூறினார்.

'பிசிஎஃப் ஸ்பார்க்கல்டாட்ஸ்' பாலர் பள்ளியான அதில், பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டதாக அந்தப் பேச்சாளர் சொன்னார்.

அந்தப் பாலர் பள்ளியில் ஏற்பட்ட காசநோய் சம்பவம் குறித்து சுகாதார அமைச்சுக்கும் காசநோய்க் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கும் கடந்த மாதம் 26ஆம் தேதி தகவல் அளிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

காசநோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், அந்தப் பாலர் பள்ளியில் நோய்க் கிருமி பரவுவதற்கான அபாயம் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

காசநோய் சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட பாலர் பள்ளிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 10) தெரிவிக்கப்பட்டதாக 'பிசிஎஃப் ஸ்பார்க்கல்டாட்ஸ்' பேச்சாளர் ஒருவர் கூறினார்.

காசநோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டவர் அப்பள்ளி மாணவரா அல்லது அங்கு பணிபுரியும் ஊழியரா என்பதைத் தெரிவிக்க அப்பேச்சாளர் மறுத்துவிட்டார்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

குறிப்புச் சொற்கள்