சீரூடைக் குழுவைச் சேர்ந்த ஏழு பையன்களை மானபங்கம் செய்த ஆசிரியர் ஒருவருக்கு 26 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மூன்று பிரம்படிகள் கொடுக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தண்டனை பெற்ற அந்த ஆடவருக்கு இப்போது வயது 39. அவர் 2017 செப்டம்பர் 14ஆம் தேதி முதல் பணியில் இருந்து நீக்கப்பட்டார். எந்தப் பள்ளியிலும் அவர் இப்போது ஆசிரியர் வேலை பார்க்கவில்லை.
மூன்று பையன்கள் தொடர்பான மூன்று மானபங்க குற்றச்சாட்டுகளின் பேரில் டிசம்பர் 5ஆம் தேதி அந்த முன்னாள் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதர நான்கு பதின்ம வயதினர் தொடர்பான இதேபோன்ற ஆறு குற்றச்சாட்டுகள், தண்டனை விதிக்கப்பட்டபோது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
அந்த ஆடவர், 2015க்கும் 2017க்கும் இடையில் இந்தக் குற்றச்செயல்களைச் செய்தார்.
இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளியின் பெயரையும் அவர் பணியாற்றிய பள்ளிக்கூடத்தின் பெயரையும் வெளியிடக்கூடாது என்று தடை இருக்கிறது.
இதனிடையே, நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து அந்த ஆசிரியருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்போவதாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றில் ஏற்கெனவே தெரிவித்து இருக்கிறது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity