நடைபாதைகளில் மின்ஸ்கூட்டர்களை ஓட்டிவரக் கூடாது என்பதை நினைவூட்டும் அடையாளங்கள், ஒன்பது சைக்கிளோட்ட நகர்களிலும் அமைக்கப்பட்டு வருகின்றன.
மின்ஸ்கூட்டர்களுக்கு நடைபாதையில் விதிக்கப்பட்டு இருக்கும் தடையை அமலாக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக நிலப் போக்குவரத்து ஆணையம் இத்தகைய அடையாளங்களை அமைத்து வருகிறது.
ஜூரோங், செம்பவாங்கில் இத்தகைய அடையாளங்களை ஏற்கெனவே அமைத்து இருப்பதாக நேற்று ஆணையம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.
தெம்பனிஸ், சாங்கி-சீமெய், பாசிர் ரிஸ், ஈசூன், பொங்கோல், அங் மோ கியோ, பிடோக் ஆகியவை இதர சைக்கிளோட்ட நகர்களாகும். அந்த நகர்களில் சைக்கிளோட்டப் பாதைகள் கட்டமைப்பு இருக்கிறது.
நடைபாதைகளில் மின்ஸ்கூட்டர்களுக்கு அனுமதி கிடையாது என்பதை நினைவூட்ட விரும்புகிறோம். 2020 ஜனவரி 1 முதல் இந்தச் சட்டம் கடுமையாக அமலாக்கப்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
நடைபாதைகளில் நவம்பர் 5 முதல் மின்ஸ்கூட்டர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு முதல் இந்த விதியை மீறுவோருக்கு $2,000 வரை அபராதம் மற்றும்/அல்லது மூன்று மாதம் வரைசிறைத்தண்டனை விதிக்க முடியும்.
மின்ஸ்கூட்டருக்குத் தடை விதிப்பதை நினைவூட்டும் இந்தத் தரை அடையாளங்கள் இணையத்தில் பரபரப்பாகி இருக்கின்றன. அதற்கு மாறுபட்ட கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.