ஹைஃபிளக்ஸ் நிறுவன விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள முதலீட்டு நிறுவனம் ஹைஃபிளக்சின் கடன்களைத் தீர்த்து அதில் முதலீடு செய்ய முன்வந்துள்ளது.
கடந்த ஆண்டு தீர்க்கப்பட இருந்த ஹைஃபிளக்சின் 4.25 விழுக்காடு கடனையும் இவ்வாண்டு தீர்க்கப்பட இருக்கும் 4.6 மற்றும் 4.2 விழுக்காடு கடன்
களையும் தீர்க்க ஆக்வா முண்டா என்ற அந்தப் புதிய நிறுவனம் முன்வந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், மற்றவர்களிடமிருந்து பெற்ற கடன்களையும் தீர்க்க ஆக்வா முண்டா திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து சிங்கப்பூர் பங்குச் சந்தையிடம் அந்த நிறுவனம் விண்ணப்பம் செய்துள்ளது.
இந்தக் கடனின் மொத்த தொகை ஏறத்தாழ $1.8 பில்லியன் என்று ஆக்வா முண்டா தோராயமாகக் கணித்துள்ளது.
ஆக்வா முண்டா நிறுவனம் நேற்று முன்தினம் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டது. ஓஷியன் ஃபைனான்ஷியல் சென்டரின் 27வது மாடியில் அதன் அலுவலகம் உள்ளது.
தண்ணீர் சுத்திகரிப்பு, கழிவு மறுபயனீடு போன்ற வர்த்தகங்களில் ஆக்வா முண்டா ஈடுபட்டு வருகிறது.
$1 மில்லியன் பங்கு நிதியுடன் இருக்கும் ஆக்வா முண்டாவின் உரிமையாளர் சிங்கப்பூரரான பாம்பாங் சுகெங் கஜாய்ரி ஆவார்.
ஹைஃபிளக்ஸ் நிறுவனத்தின் கடன்களைத் தீர்த்து அதில் முதலீடு செய்ய தேவையான பணத்தைக் கடனாகக் கொடுக்க விரும்பும் நிறுவனங்கள் இம்மாதம் 30ஆம் தேதி காலை 9 மணியிலிருந்து அடுத்த மாதம் 10ஆம் தேதி மாலை 5 மணி வரை நடத்தப்படும் ஏலக் குத்தகையில் பங்கெடுக்கலாம்.
இது தொடர்பான நிபந்தனைகள் பற்றி மேல் விவரங்கள் கொண்ட அறிக்கை இம்மாதம் 27ஆம் தேதியன்று வெளியிடப்படும்.
கடன் மறுசீரமைப்புக்காக கடந்த ஆண்டு மே மாதத்தில் ஹைஃபிளக்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது. அதையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதியன்று ஐக்கிய அரபு சிற்றரசுகளைச் சேர்ந்த யுடிக்கோ நிறுவனத்துடன் $400 மில்லியன் மீட்பு ஒப்பந்தத்தில் அது கையெழுத்திட்டது.
“நிலைமையை ஹைஃபிளக்ஸ் ஆராய்ந்து வருகிறது. மறுசீரமைப்பு முயற்சியில் ஆக்வா முண்டாவின் பங்களிப்பு எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை தற்போது கூற இயலாது,” என்று ஹைஃபிளக்ஸ் நிறுவனத்தைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞரான மனோஜ் சந்திரசேகரா கூறினார்.