பெண் ஒருவரைக் கடத்திய குற்றத்துக்காக ஆடவருக்கு 8 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. குடிபோதையில் இருந்த அந்த 23 வயது பெண்ணுக்கு உதவி செய்வதாகக் கூறி அவரை நெருங்கிய ஷம்சுல் அப்துல்லா, அப்பெண்ணை டாக்சிக்குள் கொண்டு சென்றார்.
இதையடுத்து, அப்பெண்ணை அவர் இரண்டு வெவ்வேறு ஹோட்டல்களுக்கு அழைத்துச் செல்ல முயன்றார். ஆனால் தமது வீட்டின் அஞ்சல் குறியீட்டை அப்பெண் உரக்கச் சொன்னதை அடுத்து டாக்சி ஓட்டுநர் அவரது வீட்டை நோக்கி டாக்சியை செலுத்தினார். அதன் பிறகு, அப்பெண்ணுடைய புளோக்கின் தரைத்தளத்துக்குக் கொண்டு சென்ற ஷம்சுல் அவரை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றார்.
இந்தச் சம்பவம் 2016ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. பத்து நாட்கள் வழக்கு விசாரணைக்குப் பிறகு தற்போது 53 வயதான ஷம்சுலுக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 29ஆம் தேதியன்று அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
ஷம்சுல் மீது பதிவாகியிருந்து மானபங்க குற்றச்சாட்டுகளை நீதிபதி தள்ளுபடி செய்தார். பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தைப் பாதுகாக்க அவரது பெயரை வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளையும் ஷம்சுல் எதிர்நோக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடத்தல் குற்றம் புரிவோருக்கு ஏழாண்டு வரை சிறை, அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.