முறையான அனுமதியின்றி செங்காங் எல்ஆர்டி நிலையத்துக்கு அருகில் ஆளில்லா வானூர்தியை முழுநேர தேசிய சேவையாளர் ஒருவர் பறக்கவிட்டதாகவும் அப்போது வானூர்தியின் பேட்டரி தீர்ந்து அது தண்டவாளத்தில் தரையிறங்கியதை அடுத்து, அதன் மீது ரயில் மோதியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 8ஆம் தேதியன்று நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக ரயிலுக்கும் ரயில் சேவைக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. பொதுமக்களுக்கும் பொதுச் சொத்துக்கும் ஆபத்து விளைவிக்கும் வகையில் ஆளில்லா வானூர்தியைப் பறக்கவிட்டதாக 21 வயது ஹோமன் வோங் நேற்று ஒப்புக்கொண்டார்.
அத்தகைய ஆளில்லா வானூர்தியைச் செலுத்த தேவையான இரண்டாம் பிரிவு நடவடிக்கை அனுமதிச் சீட்டு இன்றி சிலேத்தார் விமான நிலைத்துக்கும் பாய லேபார் ஆகாயப் படை முகாமுக்கும் 5 கிலோ மீட்டர் தூரத்துக்குள் ஆளில்லா வானூர்தியைப் பறக்கவிட்டதாகப் பதிவான குற்றச்சாட்டும் தீர்ப்பளிக்கும்போது கருத்தில் கொள்ளப்படும்.
“நடவடிக்கை அனுமதிச் சீட்டுக்கு அவர் விண்ணப்பம் செய்திருந்தால் பாதுகாப்பு நிபந்தனைகளுக்கு உட்பட்ட ஆளில்லா வானூர்தியைப் பறக்கவிட சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அவரிடம் கூறியிருக்கும்,” என்று அரசாங்க வழக்கறிஞர் ஹியூஸ்டன் யோஹானஸ் தெரிவித்தார்.
பேட்டரியின் ஆயுளில் 85 விழுக்காடு பயன்படுத்தப்பட்டவுடன் ஆளில்லா வானூர்தியைத் தரையிறக்கிவிட வேண்டும், பொதுப் போக்குவரத்து அல்லது அவசரகால சேவை ஆகியவற்றுக்கு இடையூறு விளைவிக்கக்கூடாது, பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடாது ஆகியவை நிபந்தனைகளில் அடங்கும் என்றார் அவர்.
சம்பவம் நிகழ்ந்த நாளன்று தமது ஆளில்லா வானூர்தியை வோங் அதிகபட்சமாக 50 மீட்டர் உயரத்தில் பறக்கவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. எல்ஆர்டி நிலையத்துக்குள் வரும் ரயில்கள் அங்கிருந்து கிளம்பும் ரயில்கள் ஆகியவற்றை மேலிருந்து படமெடுக்க தண்டவாளத்துக்கு மேல் ஆளில்லா வானூர்தியை வோங் செலுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஆளில்லா வானூர்தியின் பேட்டரி அளவு போதுமான அளவில் உள்ளதா என்பதை உறுதி செய்ய வோக் தவறிவிட்டதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
வானூர்தி தண்டளாத்தில் விழந்து அதன் மீது ரயில் மோதியதை அடுத்து அதைப் பெற்றுத் தருமாறு நிலையத்தின் ஊழியர்களிடம் வோங் கேட்டுக்கொண்டார். நிலையத்தின் ஊழியர்கள் ஒரு வாரம் கழித்து அந்த வானூர்தியை மீட்டு அவரிடம் கொடுத்தனர்.
இதையடுத்து, தமது ஆளில்லா வானூர்தி ரயில் மோதியும் பிழைத்துக்கொண்டதாக யூடியூப் காணொளியில் வோங் தெரிவித்ததை அடுத்து, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 9ஆம் தேதியன்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்திடம் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் புகார் செய்தது.
வோங்கிற்கு எதிராக அடுத்த மாதம் 9ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும். பொதுமக்களுக்கும் பொதுச் சொத்துக்கும் ஆபத்து விளைவிக்கும் வகையில் ஆளில்லா வானூர்தியைப் பறக்கவிடுவது தொடர்பாக முதல்முறை குற்றம் புரிபவர்களுக்கு $20,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
அதே குற்றத்தைத் தொடர்ந்து செய்பவர்களுக்கு 15 மாதங்கள் வரை சிறைத் தண்டனையும் $40,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.