சிவப்புப் போக்குவரத்து விளக்கில் நிறுத்தாமல் பேருந்தைத் தொடர்ந்து செலுத்திய தனது ஓட்டுநர் மீது டவர் டிரான்சிட் நிறுவனம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
அவ்வாறு செய்வது தவறு என அந்த ஓட்டுநருக்கு டவர் டிரான்சிட் ஆலோசனை வழங்கியுள்ளது. பேருந்துச் சேவை 97ஐ ஓட்டிய அந்த ஓட்டுநர் செந்தோசா கேட்வேக்கு அருகில் உள்ள தெலுக் பிளாங்கா சாலைக்கும் கம்போங் பாருவுக்கும் இடைப்பட்ட சாலைச் சந்திப்பில் போக்குவரத்து சமிக்ஞை விளக்கு சிவப்பு நிறத்தில் இருக்க, நிறுத்தாமல் பேருந்தைத் தொடர்ந்து செலுத்தியது தனக்குத் தெரியும் என்று டவர் டிரான்சிட் நேற்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தது.
“எங்கள் பயணிகள், சாலையைப் பயன்படுத்தும் மற்றவர்கள் ஆகியோரின் பாதுகாப்புக்கு நாங்கள் முன்னுரிமை தருகிறோம்.
“எங்கள் பேருந்து ஓட்டுநர்கள் ஆபத்தான முறையில் பேருந்து ஓட்டுவதைப் பார்த்தால் அதுகுறித்து எங்கள் வாடிக்கையாளர் அனுபவக் குழுவிடம் தெரிவிக்கும்படி ஊக்குவிக்கிறோம்,” என்று டவர் டிரான்சிட் நிறுவனத்தின் குழுத் தொடர்பு இயக்குநர் கிளென் லிம் கூறினார்.
போக்குவரத்து விளக்கு சிவப்பு நிறத்தில் இருக்க, அந்தப் பேருந்து நிற்காமல் சென்றதை அதற்குப் பின்னால் சென்றுகொண்டிருந்த காரில் இருந்த கேமரா பதிவு செய்தது. அந்தக் காணொளிப் பதிவு கடந்த திங்கட்கிழமையன்று ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டது. போக்குவரத்து விளக்கு பச்சையிலிருந்து மஞ்சளுக்கு மாறியபோது சிவப்பு விளக்கை எதிர்பார்த்து அதற்கு முன்னால் நின்றுகொண்டிருந்த டாக்சியைக் கடந்து செல்லும் நோக்கில் அந்தப் பேருந்து தனது வேகத்தை அதிகப்படுத்தி சமிக்ஞை போடாமல் ஆக வலது தடத்துக்குச் சென்றது.
போக்குவரத்து விளக்கு சிவப்பு நிறத்துக்கு மாறியதும் அந்தப் பேருந்து தொடர்ந்து செலுத்தப்படுவதை காணொளியில் காண முடிந்ததாகக் கூறப்படுகிறது.