விடுமுறைக்காக சிங்கப்பூருக்கு வந்திருந்த வியட்னாமிய இளையர் மின்ஸ்கூட்டர் ஓட்டியபோது பாதசாரி மீது மோதி காயம் விளைவித்தார். அதற்காக 16 வயது நுவென் டோவான் நாமுக்கு ஒரு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த மே மாதம் 20ஆம் தேதியன்று தமது நண்பரிடமிருந்து நுவென் மின்ஸ்கூட்டரை இரவல் வாங்கியதாக தெரிவிக்கப்பட்டது.
நண்பர் ஒருவரையும் மின்ஸ்கூட்டரில் ஏற்றிக்கொண்டு போக்குவரத்துக்கு எதிரான திசையில் அவர் அதை சாலையில் ஓட்டியதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கேலாங் சாலையைக் கடக்க சாலையோர நடைபாதையில் 37 வயது திரு டியோ கோக் ஹோக் காத்துக்கொண்டிருந்தார்.
போக்குவரத்து வரும் திசையைப் பார்த்து வாகனங்கள் இல்லாததை உறுதி செய்த பிறகு சாலையைக் கடக்க திரு டியோ தொடங்கினார். அப்போது எதிர் திசையிலிருந்து வந்த மின்ஸ்கூட்டர் அவர் மீது மோதியது.
மின்ஸ்கூட்டர் மோதியதில் திரு டான் தரையில் விழுந்தார். விபத்து குறித்து அவர் போலிசாருக்குத் தகவல் தெரிவித்தார். அவர் ஆம்புலன்ஸ் மூலம் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
நுவென் ஓட்டிய மின்ஸ்கூட்டர் பதிவு செய்யப்படவில்லை என்றும் அது மலேசியாவில் வாங்கப்பட்டது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கவனக்குறைவுடன் மின்ஸ்கூட்டர் ஓட்டி திரு டானுக்குக் காயம் விளைவித்த குற்றத்துக்காக நுவெனுக்கு ஓராண்டு வரை சிறைத் தண்டனையும் $5,000 வரை அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.