சிங்கப்பூரில் ஊழியர்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது என்று பத்தில் எழுவர் ஒப்புக்கொண்டாலும் வெளிநாட்டு ஊழியர்கள் தேவை என்று நான்கில் ஒருவர் மட்டுமே கூறியுள்ளனர்.
அனைத்துலக வெளிநாட்டு ஊழியர் தினத்தையொட்டி, நான்கு ஆசிய நாடுகளை மையமாகக் கொண்டு அனைத்துலக தொழிலாளர் அமைப்பும் ஐ.நாவின் மகளிர் அணியும் மேற்கொண்ட கருத்துக்கணிப்பு இதைத் தெரிவிக்கிறது.
வெளிநாட்டு ஊழியர்களால் நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாக ஆய்வில் பங்கேற்றவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் கருதுகின்றனர்.
அத்துடன், நாட்டின் கலாசார, மரபுடைமைக்கும் வெளிநாட்டு ஊழியர்களால் அச்சுறுத்தல் ஏற்படுவதாக இவர்கள் கருத்து தெரிவித்தனர்.
ஜப்பான், மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் இதே போன்ற கருத்துகள் பெறப்பட்டன. ஆனால் இம்மூன்று நாடுகளைச் சேர்ந்தோரைக் காட்டிலும் சிங்கப்பூரர்கள் வெளிநாட்டு ஊழியர்கள் மீது கொண்டுள்ள நேர்மறையான எண்ணம் சற்று மேம்பட்டிருந்தது.
புலம்பெயர்தல் அதிகரித்திருந்தாலும் வெளிநாட்டு ஊழியர்கள் மீது கொண்டுள்ள நேர்மறையான எண்ணங்கள் கடந்த பத்தாண்டில் குறைந்துள்ளதாக அறிக்கை உணர்த்துகிறது.
இந்த ஆய்வு கடந்த ஆண்டு டிசம்பருக்கும் இவ்வாண்டு ஜனவரிக்கும் இடையே நடத்தப்பட்டது.
இவ்வாண்டு ஜூன் மாத நிலவரப்படி, இங்கு 1.4 மில்லியன் வெளிநாட்டினர் பணியாற்றியதாக மனிதவள அமைச்சின் தகவல் தெரிவிக்கிறது.
2010ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட இதுபோன்ற ஆய்வு ஒன்றுடன் ஒப்புநோக்க, அறிவு, மனப்போக்கு, வெளிநாட்டு ஊழியர்கள் மீதான நடைமுறைகள் உள்ளிட்ட அம்சங்களைக் கணக்கிடும் மதிப்பெண் தற்போது ஏழு புள்ளிகள் குறைந்து 29 ஆனது.
மொத்தம் 15 கேள்விகளின் அடிப்படையில் இந்த மதிப்பெண் கணக்கிடப்படுகிறது. உதாரணத்திற்கு, நாட்டில் வெளிநாட்டினர் அதிக எண்ணிக்கையிலான குற்றங்களைப் புரிகின்றனரா உள்ளிட்ட கேள்விகள் இவற்றில் உள்ளடங்கும்.