தொடர் மழையின் காரணமாக மலேசி யாவில் இருந்து தருவிக்கப்படும் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.
குறிப்பாக, ஜோகூர் பாரு, கேமரன் மலை ஆகியவற்றிலிருந்து வரும் ‘சோய் சாம்’, ‘பொக் சொய்’ காய்கறிகளின் விலை 80% உயர்ந்துள்ளது
என்று மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை, மலேசியாவிலிருந்து வரும் காய்கறிகளின் விநியோகத்தையும் அதன் தரத்தையும் பாதித்துள்ளது என்று கூறினார் சிங்கப்பூர் பழங்கள், காய்கறிகள் இறக்குமதி, ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் திரு ஜெர்ரி டான்.
மலேசியாவில் வருடாந்திர மழைக்கால பருவம் தொடர்கிறது. குறிப்பாக, ஜோகூர் மாநிலமே அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதில் குளுவாங், சிகாமட், கோத்தா திங்கி ஆகிய பகுதிகள் 2.5 மீட்டர் வெள்ள நீரில் மூழ்கியிருக்கின்றன.
பேரங்காடிகளைவிட ஈரச் சந்தையில் உள்ள காய்கறிக் கடைகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. காரணம், அவை ஒன்று அல்லது குறிப்பிட்ட சில காற்கறி வியாபாரிகளிடம்தான் தங்கள் காய்கறிகளைப் பெற்று வருகின்றன.
சுவா சூ காங்கில் கொக் ஃபா தொழில்நுட்பப் பண்ணையைக் குடும்பத் தொழிலாக நடத்தி வரும் திரு வோங் கொக் ஃபா, “மழை காரணமாக ஆண்டுதோறும் காய்கறிகளின் விலைகளில் ஏற்றம் இருக்கத்தான் செய்யும்.
“ஆனால், இந்த ஆண்டு நிலைமை மோசமாக உள்ளது. மலேசியாவிலிருந்து வரும் காய்கறிகளின் விலை இரண்டு வாரங்களுக்கு முன்பே ஏறத் தொடங்கிவிட்டன.
“சீனா, இந்தோனீசியா போன்ற நாடுகளிலிருந்து வரும் காய்கறிகளின் விலை நிலையாக உள்ளது. தாய்லாந்திலிருந்து வரும் தக்காளிப் பழங்களும் இந்தோனீசியாவிலிருந்து வரும் முட்டைக் கோசும் இதில் உள்ளடங்கும்,” என்று விவரித்தார்.