உற்பத்தித் துறை மின்னிலக்கமயமாவதற்கு ஆதரவாகப் புதிய தொழில்நுட்பத் திட்டம் ஒன்று நேற்று தொடங்கப்பட்டது.
உற்பத்தித் துறை சார்ந்த நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் மின்னிலக்கமயமாவது தொடர்பில் கூடுதல் உதவி பெற இத்திட்டம் கைகொடுக்கும் என்று தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் மத்திய கல்லூரி வளாகத்தில் வர்த்தக, தொழில் மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் நேற்று தெரிவித்தார்.
இப்புதிய திட்டம் வழி நிறுவனங்களால் மின்னிலக்கத் தீர்வுகளை உருவாக்க இயல்வதுடன் அறிவார்ந்த கருவிகளைக் கொண்டு ஆராய்ச்சியும் செய்ய முடியும் என்று கூறப்பட்டது.
தங்களின் திறன் மேம்பாட்டுக்காக ஊழியர்கள் உற்பத்தித் துறைக்குப் பொருத்தமான பாடங்களையும் கற்க இத்திட்டம் உதவும்.
இத்திட்டம் மூலம் தொழில்நுட்பக் கல்விக் கழகமும் இதர வர்த்தக நிறுவனங்களும் ஒன்றிணைந்து தொழில்நுட்பத் தீர்வுகளைத் திரட்டுவதுடன் நிறுவனங்கள் சந்திக்கக்கூடிய முக்கிய தொழில்நுட்பச் சவால்களைச் சமாளிக்கவும் முடியும் என்று டாக்டர் கோ குறிப்பிட்டார்.
இதனால் நிறுவனங்கள் தங்களின் உற்பத்தி வசதிகளைத் திறம்படப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும் வர்த்தக செயல்முறைகளை மேலும் குறுகிய காலகட்டத்தில் உருமாற்றிட முடியும் என்றும் அவர் விவரித்தார்.
தானியக்கம், மின்னிலக்கம், செயற்கை நுண்ணறிவு போன்ற அறிவார்ந்த, அதிநவீன தொழில்நுட்பங்களை ஒருசேர பயன்படுத்துவதால் உற்பத்தித் துறையில் பேரளவிலான மாற்றங்களைச் செய்ய முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார் அமைச்சர்.
இதற்கிடையே ஊழியர்கள் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மின்னிலக்கத்தை நோக்கி நிறுவனங்கள் கொண்டு செல்லவேண்டும் என்றும் அமைச்சர் கோ அறைகூவல் விடுத்தார். உற்பத்தித் துறை, நாட்டின் பொருளியலில் 20 விழுக்காட்டுக்கு மேல் பங்களிக்கிறது. அத்துடன் ஊழியரணியில் கிட்டத்தட்ட 13 விழுக்காட்டினர் உற்பத்தித் துறையைச் சேர்ந்தவர்கள்.