பள்ளிக் கட்டணத்தைக் கட்டத் தவறினால் தொடக்கப்பள்ளி இறுதி யாண்டுத் தேர்வு (பிஎஸ்எல்இ) முடிவின் அசலை மாணவருக்குக் கொடுக்காமல் இருக்கும் வழக்கம் குறித்து மறுஆய்வு தேவை என்று நேற்று முன்தினம் கூறினார் கல்வி அமைச்சர் ஓங் யி காங்.
இதன் தொடர்பில் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் பேசவிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
பள்ளிக் கட்டணத்தைச் சுட்டி அசலைத் தராமல் இருக்கும் கல்வி அமைச்சின் வழக்கம் நீக்கப்படவேண்டும் என்று திரு டெரன்ஸ் டான் இம்மாதத் தொடக்கத்தில் மனு ஒன்றைச் சமர்ப்பித்திருந்தார்.
மனு குறித்து திரு டானுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் திரு ஓங் இவ்வாறு பதிலளித்திருந்தார்.
இதற்கிடையே மனுவில் குறிப்பிடப்பட்ட அனைத்தையும் தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் சொன்னார்.
“பள்ளிக் கட்டணத்தைக் கட்டாத சில சம்பவங்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால் இவ்வாறு பிஎஸ்எல்இ முடிவின் அசலைக் கொடுக்காமல் இருக்கும் வழக்கம் பயனளிக்கிறதா என்பதை ஆராயவேண்டும்,” என்று அமைச்சர் மின்னஞ்சலில் கூறியிருந்தார்.
அமைச்சர் ஓங் தமக்கு அனுப்பிய மின்னஞ்சலை திரு டான் தம் ஃபேஸ்புக்வழி பகிர்ந்துகொண்டார்.
மனுவில் 3,100க்கும் மேற்பட்டோர் தங்களின் ஆதரவைத் தெரிவித்துக் கையெழுத்திட்டிருந்தனர்.
பள்ளிக்கு இன்னும் $156ஐ கட்டவில்லை என்ற காரணத்தால் சென்ற மாதம் ஒரு மாணவிக்கு அவரின் பிஎஸ்எல்இ முடிவுகளைக் கொண்ட ஆவணத்தின் நகல் மட்டுமே தரப்பட்டது.
இதை அறிந்த தொழில் ஆலோசகரும் ஆர்வலருமான கில்பர்ட் கோ தம் ஃபேஸ்புக்கில் பதிவிட்டதை அடுத்து, அது பெரும் சர்ச்சைக்குரியதாகி உள்ளதைத் தொடர்ந்து கல்வி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.