கிட்டத்தட்ட $200 மில்லியன் மதிப்பிலான எரிவாயு எண்ணெய்த் திருட்டு தொடர்பில் வியட்னாமிய ஆடவர் ஒருவருக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நடந்துள்ள ஆகப் பெரிய எரிவாயு எண்ணெய்த் திருட்டுச் சம்பவம் இது. கப்பல் கேப்டனாக இருந்த டோன் ஸுவான் தான், 47, எரிவாயு எண்ணெய்த் திருட்டு தொடர்பில் ஐந்து குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதாகவும் இவ்வழக்கு தொடர்பில் குற்றம் சாட்டப்படும் இரண்டாவது நபர் என்றும் கூறப்பட்டது. தான் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின்படி, திருடப்பட்ட எரிவாயு எண்ணெய்யின் மதிப்பு $5.7 மில்லியன் அமெரிக்க டாலர் (S$7.7 மி.) என்று கூறப்பட்டது.
2014ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் எரிவாயு எண்ணெய்த் திருட்டின் மொத்த அளவு 340,000 டன்கள் என்று மதிப்பிடப்படுகிறது. இவ்வாண்டு ஜூலை மாதத்தில் இதே எரிவாயு எண்ணெய்த் திருட்டு தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட இன்னொரு வியட்னாமியரான டங் வன் ஹானுக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. புலாவ் புக்கோமில் அமைந்துள்ள ‘ஷெல்’ எண்ணெய்ச் சுத்திரிப்பு ஆலையின் எரிவாயு எண்ணெய் திருட்டு தொடர்பில் முன்னாள் ‘ஷெல்’ ஊழியர்கள் உட்பட மேலும் பலர் சம்பந்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை நடந்து வருகிறது.