பொதுத் தாழ்வாரத்தில் அலங்காரம்; ஆண்டுதோறும் அசத்தும் ஆண்டி லிம்

ஒவ்வோர் ஆண்டும் சீனப் புத்தாண்டு, இலையுதிர் காலப் பண்டிகை, கிறிஸ்மஸ் பண்டிகை காலங்களில் தெம்பனிஸ் ஸ்திரீட் 72, புளோக் 722ன் எட்டாம் தள பொதுத் தாழ்வாரமும் மின்தூக்கி முகப்பும் அலங்காரத்துடன் காட்சி தரும்.

அந்த புளோக்கில் நீண்டகாலமாக வசிக்கும் 70 வயதான திரு ஆண்டி லிம் பெங் ஹுவாட்டின் அயராத உழைப்பும் தொண்டூழியமுமே இதற்குக் காரணம். தமது அலங்காரங்களுக்கு மறுசுழற்சி பொருட்களை மட்டுமே பயன்படுத்தும் இவர், ஒவ்வோர் ஆண்டும் வெவ்வேறு வடிவமைப்பைக் கையாண்டு வருகிறார்.

அந்த வகையில், இந்த விடுமுறைப் பருவத்திற்காக, கிட்டத்தட்ட ஐந்து மாத காலம் செலவிட்டு, அட்டைப்பெட்டி, குழாய்களைக் கொண்டு ஒரு பனிச்சறுக்கு வண்டியை உருவாக்கியுள்ளார் திரு லிம்.

பனிமனிதன், போலி அன்பளிப்புகள், பிற ஆபரணங்களுடன் ஒரு பனி இயந்திரத்தையும் அமைத்து இருக்கும் இவர், மின்னியல் துறையில் சொந்தத் தொழில் செய்து வருகிறார்.

இவ்வாண்டு கிறிஸ்மஸ் அலங்காரத்திற்காக, சீனப் புத்தாண்டின்போதே திட்டமிட்டதாகக் கூறிய திரு ஆண்டி, பனிச்சறுக்கு வண்டியை உருவாக்கும் வேலையை ஜூன் மாதம் தொடங்கியதாகவும் குறிப்பிட்டார். அதற்காக இணையத்தின் உதவியை இவர் நாடினார்.

கிறிஸ்மஸ் அலங்காரத்திற்காக ஒவ்வொரு இரவிலும் ஒரு மணி நேரத்தைச் செலவிட்ட இவர், கடந்த மாதம் அப்பணி முடிவுக்கு வந்தது. அத்துடன், இம்மாதம் 1ஆம் தேதி ஒளியூட்டு விழாவையும் நடத்தினார்.

“குழந்தைகள் வந்து, விளையாடி மகிழ்ந்து, புகைப்படம் எடுத்துச் செல்வதற்காகவே இதையெல்லாம் செய்கிறேன்,” என்று நெகிழ்ச்சியுடன் ‘தி நியூ பேப்பர்’ நாளிதழுடன் கூறினார் திரு லிம்.

அலங்காரம்தான் என்றாலும் பாதுகாப்பிற்கு எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருகிறார். அலங்காரத்தை ஒட்டி தீயணைப்பான்களையும் இவர் வைத்திருக்கிறார். அலங்காரத்தில் இடம்பெற்றுள்ள விளக்குகளுக்கு ஒளியூட்ட தமது வீட்டு மின்சாரத்தையே பயன்படுத்துகிறார். பண்டிகைக் காலம் முடிந்து அலங்காரத்தை அகற்றி, அவ்விடத்தைச் சுத்தம் செய்யவும் தவறுவதில்லை.

அலங்காரத்திற்குக் கழித்துக்கட்டப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தியபோதும் சிறிய அளவிலான கிறிஸ்மஸ் மரத்திற்காக இவ்வாண்டு தமது கையிலிருந்து 85 வெள்ளி பணத்தையும் திரு லிம் செலவிட்டுள்ளார். ஆனாலும், அந்தச் செலவானது அலங்காரத்திற்கு மேலும் அழகூட்டுவதாகவே அமைந்தது.

“இந்த அலங்காரங்களைப் பார்ப்பதற்காக கடைத்தொகுதிகளுக்குச் செல்லத் தேவையில்லை. வீடமைப்புப் பேட்டைகளிலேயே அவற்றை அமைக்க முடியும்,” என்கிறார் திரு லிம்.

இவரது அலங்காரங்கள், தங்களுக்குச் சலிப்பு ஏற்படாமல் தடுக்க உதவுகின்றன என்றார் அண்டை வீட்டுக்காரரான திரு ராபர்ட் சுவா, 41.

“ஆர்ச்சர்ட் அல்லது நகர்ப் பகுதிகளுக்குச் செல்லாவிடில், நீங்கள் இத்தகைய அலங்காரங்களைக் காண முடியாது. ஆனால், எங்களது தளத்தில் அப்படியில்லை. ஒவ்வொரு நாளும் அதைக் காண்கிறோம்; ஒவ்வொரு நாளும் பண்டிகை போன்றே உணர்கிறோம். நிச்சயமாக இது எங்களுக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது,” என்றார் ஆசிரியராகப் பணியாற்றும் திரு சுவா.

சீனப் பெருநாளுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், கிறிஸ்மஸ் அலங்காரத்தில் இடம்பெற்றுள்ள சிலவற்றை மீண்டும் பயன்படுத்திக்கொள்ள திரு லிம் திட்டமிட்டுள்ளார். அத்துடன், அடுத்த ஆண்டு கிறிஸ்மஸ் அலங்காரத்திற்கும் இப்போதே திட்டமிடத் தொடங்கிவிட்டார்.

தம்மை நிறுத்தச் சொல்லாதவரை, தமது உடல் ஒத்துழைக்கும் வரை இப்படி அலங்கரிப்பதைத் தொடர்வேன் எனக் கூறும் இவர், “எதுவுமே செய்யாமல் இருந்தால்தான் சிரமமாக உணர்வேன்,” என்றும் குறிப்பிட்டார்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!