மின்னணு உற்பத்தி நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குநராக இருந்த சோ சியாவ் டியோங், 60, ஐந்து வங்கிகளிடமிருந்து $10 மில்லியன் வெள்ளிக்கு மேல் ஏமாற்றியதாக கூறப்பட்டது.
2007க்கும் 2011க்கும் இடைப்பட்ட காலத்தில் சோ இம்மோசடியில் ஈடுபட்டதாக நேற்று நீதிமன்றத்தில் தெரிவிக் கப்பட்டது. சோ பணிபுரிந்த ‘எஸ்பிஇ டெக்னாலஜி’ நிறுவனம், 2015ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதியன்று மூடப்பட்டது.
அத்துடன் தற்போது எந்தப் பதவியிலும் சோ இல்லை என்று கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையம் உறுதிப்படுத்தியது. இதற்கிடையே பல நிறுவனங்களில் சோ இயக்குநராக இருந்ததாக நம்பப்படுகிறது.
‘ஓசிபிசி’ வங்கி, ‘யுஓபி’ வங்கி உட்பட ஐந்து வங்கிகளை ஏமாற்றியதன் தொடர்பில் 75 மோசடி குற்றச்சாட்டுகள் சோ மீது சுமத்தப்பட்டுள்ளன.
வங்கிகளின் கடன் வழங்கும் வசதியைப் பயன்படுத்திக்கொள்வதற்காக நிறுவனம் ஒன்றிடம் ஆவணங்களை அனுப்புமாறு சோ கேட்டுக்கொண்டதாக கூறப்பட்டது.
பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சோ அடுத்த மாதம் 17ஆம் தேதியன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலை ஆவார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் சோவுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அபராதமும் விதிக்கப்படலாம்.