புக்கிட் பாஞ்சாங்கில் நேற்று முன்தினம் நிகழ்ந்த மோதி விட்டு தப்பியோடிய விபத்து ஒன்றில் சிக்கிய 40 வயது உணவு விநியோகிப்பாளர் ஒருவர் காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
பெட்டிர் ரோட்டில் நிகழ்ந்த இந்தச் சாலை விபத்துக் குறித்து தங்களுக்கு அன்று இரவு 8.11 மணிக்குத் தகவல் கிடைத்தது என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. இடது கையில் எலும்பு முறிவுக் காயத்துடன் ஆடவர் சுயநினைவுடன் டான் டோக் செங் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
பெட்டிர் ரோடு, கங்சா ரோடு சாலைச் சந்திப்பில் ஒரு காரும் ஒரு மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. மதுபோதையில் காரோட்டிய குற்றத்துக்காக 42 வயது கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.