தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் ஒருவரிடமிருந்து 200,000 வெள்ளிக்கும் அதிகமான கையூட்டுகளைப் பெற்ற முன்னைய சாங்கி விமான நிலைய ஊழியர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
45 வயது ஜேம்ஸ் லிம் லியோங் கீ, சாங்கி விமான நிலையத்தின் ஒரு பிரிவில் இணை இயக்குநராகப் பணியாற்றினார். டைமன் ஏஷியா கெபிட்டல் என்ற நிதி நிர்வாக நிறுவனத்தில் முன்னதாக அவர் தகவல் தொழில்நுட்ப நிர்வாகியாகவும் பணிபுரிந்தார்.
ஃபர்ஸ்ட் டெல் டெக் என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் இங் சூன் வெங்கிடமிருந்து லிம் 215,237 வெள்ளி வரையிலான கையூட்டைப் பெற்றதாகக் குற்றம் சாட்டப்படுகிறார். நீதிமன்றத்தில் இங் மீதும் இன்று குற்றம் சாட்டப்பட்டது.
2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை இங் பல்வேறு சமயங்களில் லிம்முக்குக் கையூட்டு கொடுத்ததாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. அத்துடன், சாங்கி விமான நிலையத்தை ஏமாற்றி டெல் டெக் நிறுவனத்திற்குக் குத்தகைகளைக் கொடுப்பதற்காக ஐந்து மோசடி விலைக்குறிப்பு பத்திரங்களைத் தயாரிக்க இங்குடனும் மற்றொருவருடனும் திட்டமிட்டதாக லிம் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
மொத்தம் 215,237 வெள்ளி ரொக்கத்தைக் கையூட்டாகக் கொடுத்ததன் பேரில் இங் குற்றம் சாட்டப்பட்டார். லிம்முடனும் மற்றொருவருடனும் இணைந்து சதி செய்ததன் பேரிலும் அவர் குற்றம் சாட்டப்பட்டார். ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபனமானால் இருவருக்கும் தலா 100,000 வெள்ளி வரையிலான அபராதம், ஐந்து ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.