கூடுதல் தரகுக்காகப் பத்திரங்களை அதிகாரமின்றி மாற்றிய சொத்து முகவருக்கு 27,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சிஇஏ எனப்படும் சொத்து முகவை மன்றத்தின் (Council for Estate Agencies) நன்னெறிக் கோட்பாடுகளை மீறியதன் தொடர்பிலான மூன்று குற்றச்சாட்டுகளின் பேரில் சொத்து முகவர் ஜார்ஜ் பே மெங் வூனுக்கு அபராதம் விதித்ததாக மன்றத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தெரிவித்தது.
கே எஃப் புரோபர்டி நெட்வர்க்கைச் சேர்ந்த 45 வயது பேயின் சொத்து முகவர் பதிவும் பத்து மாதங்களுக்கு இடைக்கால நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த இடைக்கால நீக்கம் திங்கட்கிழமை தொடங்கியதாக சிஇஏ தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
டிட்டிஸெட் (DTZ) புரோபர்டி நெட்வர்க்கில் முன்னதாகப் பணியாற்றிய பே, இந்த விதிமீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. டிட்டிஸெட்டின் பத்திரங்களை அதிகாரமின்றி மாற்றி சொத்து நிர்வாகக் கட்டணங்களாக $5,140, $29,040 மற்றும் $21,699 தரகுத் தொகைகளைப் பெற்றதை அவர் ஒப்புக்கொண்டார்.
மொத்தத்தில் பே, இந்தக் கட்டணங்களிலிருந்து 64,664 வெள்ளியைப் பெற்றார். அத்துடன், தனக்குக் கிடைக்கவேண்டிய இணைத்தரகுக் கட்டணத்தைவிட ஏழு மடங்கு அதிகமான பணத்தைப் பெற்றார். இந்தக் கூடுதல் தரகுகளை டிட்டிஸெட் நிறுவனத்திடம் தெரிவிக்கவும் அவர் தவறினார்.
பேக்கு தண்டனை விதித்தபோது மேலும் நான்கு குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் கருத்தில் கொண்டது.