ஜூரோங் வெஸ்ட் வட்டாரத்தில் பேருந்து ஒன்றால் பாதம் நசுக்கப்பட்ட 58 வயது பெண் பாதசாரிக்கு உதவி வருவதாக எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜூரோங் வெஸ்ட் சென்ட்ரல் 2க்கும் 3க்கும் இடையிலான சந்திப்பில் இந்தச் சம்பவம் டிசம்பர் 18ஆம் தேதி நடந்தது. உதவிக்கான அழைப்பு பிற்பகல் 1.45 மணிக்கு போலிசாருக்குக் கிடைத்தது. காயமடைந்த பாதசாரி சுயநினைவுடன் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
இடது காலில் கடுமையாகக் காயமடைந்த அந்தப் பெண், சாலையில் படுத்துக் கிடந்ததைக் காட்டும் காணொளி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
“இந்தப் பெண் பாதசாரிக்கு எல்லா விதத்திலும் உதவுவதைத் தலையாயப் பணியாக நாங்கள் கருதுகிறோம்,” என்று எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தின் வர்த்தகத் தொடர்புப் பிரிவின் மூத்த துணைத் தலைவர் டெம்மி டான் தெரிவித்தார்.
“அவரது குடும்பத்துடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். நடந்தது குறித்து நாங்கள் ஆழ்ந்த வருத்தத்தில் இருக்கிறோம். அதே வேளையில் நாங்கள் போலிசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு தருகிறோம்,” என்றார் திருவாட்டி டான்.