சிங்கப்பூர்-ஜோகூர் கடற்பாலத்தில் கனரக வாகனங்கள், குறிப்பாக லாரிகளின் போக்குவரத்தை இரண்டாவது பாலத்திற்கு மாற்றி விடும் முயற்சிகள் பலனளிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. அதனால் ஏற்கெனவே இருக்கும் கடுமையான வாகன நெரிசலோடு கனரக வாகனங்களும் சேர்ந்து நெரிசலை அதிகப்படுத்தி வருகின்றன.
இரண்டாவது பாலத்தில் உள்ள சுல்தான் அபுபக்கர் வளாகத்தை அதிகமான லாரிகள் பயன்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் அறிமுகம் செய்யப்படும் என்று மலேசிய அரசாங்கம் கடந்த ஜூலையில் தெரிவித்திருந்தது. அவ்வாறு அறிவிக்கப்பட்டாலும் கடற்பாலத்தில் லாரிகளால் ஏற்படும் நெரிசலோடு இப்போது இதர கனரக வாகனங்களும் இணைந்துள்ளன.
அவை கார்களுக்கு ஒதுக்கப்பட்ட தடங்களை ஆக்கிரமித்து வருவதாக த ஸ்டார் இணையச் செய்தி தெரிவிக்கிறது.
கடந்த வாரம் அவ்வாறு தவறாகப் பாதையைப் பயன்டுத்தி லாரி ஓட்டுநர்களை ஜோகூருக்கே திரும்பச் செல்லுமாறு உத்தரவிட கடற் பாலத்தின் பாதி தூரம் வரை போக்குவரத்து போலிசார் செல்லும் நிலைமை ஏற்பட்டது.
இதற்கிடையே, இரண்டாவது பாலத்தைப் பயன்படுத்தும் லாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தபோதிலும் கடற்பாலத்தைப் பயன்படுத்துவதையே பெரும்பாலான லாரி ஓட்டுநர்கள் விரும்புவதாக ஜோகூர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் நோவன் ஹிங் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது பாலத்தில் கனரக வாகனங்களுக்குக் குறைவான தீர்வை வசூலிக்கப்படுவது அதிகமான லாரி போக்குவரத்துக்கு வசதி ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும் இரு வழிகளிலும் பயன்படுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் நெரிசல் நீடிக்கிறது. குறிப்பாக விடுமுறை காலங்களில் அதிக நெரிசல் நீடித்து வருகிறது என்று அவர் கூறியதாக ‘த ஸ்டார்’ செய்தி குறிப்பிட்டது.
இரண்டாவது பாலத்திலும் கடற்பாலத்திலும் வசதிகளை மேம் படுத்துவதன் மூலமே நெரிசலைக் குறைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். இரண்டாவது பாலத்தில் போக்குவரத்தை ஊக்குவிக்கும் விதமாக கடந்த பிப்ரவரி மாதம் தீர்வைக் கட்டணத்தை மலேசியா குறைத்தது.
இந்நிலையில், சிங்கப்பூரில் உள்ள விநியோகப் பகுதிகள் அருகே உள்ளதால் தாம் இன்னமும் கடற்பாலத்தைப் பயன்படுத்து வதற்கே முன்னுரிமை தருவதாக எடி டான், 42, என்னும் லாரி ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.