சிங்கப்பூரில் விருந்து கொடுப்போரில் 10 பேரில் நான்கு பேர், தாங்கள் ஏற்பாடு செய்யும் உணவை வைத்தே எதிர்பார்ப்பதைவிட அதிக விருந்தினர்களை உபசரிப்பதாகக் கூறுகிறார்கள். இதர 10 பேரில் நான்கு பேர் தேவையான அளவுக்குப் போதிய உணவைத் தயார்செய்து விருந்து படைப்பதாகச் சொல்கிறார்கள். 10 பேரில் எஞ்சிய இரண்டு பேர் போதிய அளவு விருந்தினர்களுக்குத் தாங்கள் விருந்தளிப்பதில்லை என்று தெரிவிக்கிறார்கள்.
தேசிய சுற்றுப்புற வாரியம் நடத்திய ஆய்வு ஒன்றின் மூலம் இது தெரியவந்துள்ளது. விழாக் காலங்களின்போது உணவு விரயமாவதை சிங்கப்பூரர்கள் குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் தேசிய சுற்றுப்புற வாரியம் இந்த ஆய்வு முடிவுகளை நேற்று வெளியிட்டது. ஆய்வில் 1,000 சிங்கப்பூரர்கள் இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கும் ஏப்ரல் மாதத்திற்கும் இடையில் நேரடியாகப் பேட்டி கொடுத்தனர். உணவு விரயமாவதைப் பற்றிய மக்களின் எண்ணம், நடத்தை, மனப்போக்கு ஆகியவற்றைச் சிறந்த முறையில் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதேபோன்ற ஓர் ஆய்வு 2015ஆம் ஆண்டிலும் நடந்தது.
இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கையில் இப்போது மக்கள் உணவு விரயமாவதைப் பற்றி அதிகமாக தெரிந்துகொண்டு இருக்கிறார்கள். அதைத் தடுக்க அதிக முயற்சிகளை மேற்கொள்கிறார்கள் என்பது தெரிகிறது. வெளியே போய் சாப்பிடும்போது சாப்பிட்டுவிட்டு மீதம் இருக்கும் உணவை வீட்டுக்கு எடுத்து வந்துவிடுவதாக சுமார் 56 விழுக்காட்டினர் தெரிவித்தனர். இந்த அளவு 2015ல் 44 விழுக்காடாக இருந்தது. கொஞ்சம் குறைபாடுள்ள பழங்களை, காய்கறிகளை வாங்குவதில் ஒன்றும் தவறில்லை என்று ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கினர் இப்போது தெரிவிக்கிறார்கள். காலாவதியாகும் தேதி நெருங்கும் நிலையில் தள்ளுபடி விலையில் விற்கப்படும் உணவுப் பொருட்களை வாங்குவோரின் விகிதம் 2015ல் 18 விழுக்காடாக இருந்தது. இப்போது அது 38 விழுக்காடாகக் கூடியுள்ளது.
உணவு விரயத்தைக் குறைப்பதால் பணம் மிச்சமாவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்படுவதும் காரணம் என்று அவர்கள் கூறுகிறார்கள். உணவு வீணாவதை எப்படி குறைப்பது என்பது பற்றி மேலும் தகவல் தேவை என்று 80 விழுக்காட்டினர் விரும்புகிறார்கள். உணவுக் கடைகளில் குறைவான அளவுகளில் உணவு விற்கப்பட்டால் விரயமாகக்கூடிய உணவு அளவு குறையும் என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள் என்றும் இந்த வாரியம் கூறியது. சிங்கப்பூரில் சென்ற ஆண்டு 763,100 டன் உணவு விரயமானது. இந்த அளவு 2017ல் 809,800 டன்.