தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றின் இயக்குநரிடம் இருந்து $200,000க்கும் மேல் லஞ்சம் வாங்கியதாக சாங்கி விமான நிலையப் பிரிவு நிறுவன முன்னாள் அதிகாரி மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
ஜேம்ஸ் லிம் லியோங் கீ, 45, எனப்படும் அவர், சாங்கி ஏர்போர்ட்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் இணை இயக்குநராக வேலை செய்து வந்தார். அத்துடன் ‘டைமன் ஏஷியா கேப்பிட்டல்’ என்னும் நிறுவனத்தின் முன்னாள் தகவல் தொழில்நுட்ப மேலாளராகவும் பணிபுரிந்தவர்.
‘சாங்கி ஏர்போர்ட்ஸ் இண்டர்நேஷனல்’ என்பது சாங்கி விமான நிலையக் குழுமத்தின் முதலீடு மற்றும் ஆலோசனைப் பிரிவு ஆகும்.
‘ஃபர்ட்ஸ் டெல் டெக்’ என்னும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநரான இங் சூன் வெங், 45, என்பவரிடமிருந்து லிம் $215,237 தொகையை லஞ்சமாகப் பெற்றதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது.
தாம் பணிபுரிந்த சாங்கி ஏர்போர்ட்ஸ் இண்டர்நேஷனல், டைமன் ஏஷியா கேப்பிட்டல் ஆகிய நிறுவனங்களிடமிருந்து வர்த்தக அனுகூலன்களைப் பெற்றுத் தருவதற்காக அவர் அந்தத் தொகையை 98 சந்தர்ப்பங்களில் பெற்றதாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையில் லிம் லஞ்சம் பெற்று வந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
இங் சூன் வெங் மீதும் நேற்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. 98 சந்தர்ப்பங்களில் லிம்முக்கு $215,237 லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த இருவருக்கும் $50,000 பிணை வழங்கப்பட்டு உள்ளது. அடுத்தகட்ட வழக்கு விசாரணை மீண்டும் ஜனவரி 20ஆம் தேதி நடைபெறும்.
லஞ்சம் கொடுத்த, லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் $100,000 வரையிலான அபராதமும் ஐந்தாண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.
மோசடி செய்யும் நோக்கத்தோடு போலிப் பத்திரம் அல்லது போலி கையெழுத்து குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் இருவரையும் பத்தாண்டுகள் வரை சிறையில் அடைக்க முடியும்.
பொருட்களை கொள்முதல் செய்வது, உள்ளக கணக்குத் தணிக்கை போன்ற பிரிவுகளின் நடைமுறைகளை வலுவாக்குமாறு சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்களை லஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
சட்டவிரோதச் செயல்கள் மூலம் சொந்த நலனில் ஈடுபடும் மோசமான ஊழியர்களின் நேர்மையற்ற செயல்களுக்கு இரையாகாமல் தவிர்க்க பலமிக்க நடைமுறைகள் உதவும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது. லஞ்ச ஊழல் தொடர்பான எல்லாப் புகார்களையும் தான் வரவேற்பதாகவும் அதன் அறிக்கை கூறியுள்ளது.