வயது குறைந்த மாற்றான் மகளுடன் பாதுகாப்பற்ற பாலியல் உறவு கொண்ட குற்றத்திற்காக உதவி சேவை பொறியாளர் ஒருவருக்கு நேற்று நீதிமன்றத்தில் மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அந்த 41 வயது சிங்கப்பூரர் தம் மீதான ஒரு குற்றச்சாட்டை கடந்த மாதம் ஒப்புக்கொண்டார். வயது குறைந்த பெண்ணின் சம்மதத்துடன் தாம் அந்தக் குற்றத்தில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார் என நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
அதேபோன்ற மற்றொரு குற்றச்சாட்டு தண்டனை விதிக்கப்படும்போது கவனத்தில் கொள்ளப்பட்டது.
பெண்ணின் அடையாளத்தைப் பாதுகாக்கும் பொருட்டு தடை ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.
தமது தாயாரை மணந்துள்ள அந்த ஆடவரை அந்தப் பெண் ‘அங்கிள்’ என்று அழைத்து வந்தாராம்.
ஆடவர் அந்தப் பெண்ணை தமது வளர்ப்பு மகளாக நடத்தி வந்தபோதிலும் நாளடைவில் அவ்விருவரிடைய நெருக்கம் அதிகரித்து குறுந்தகவல் பரிமாற்றம் அடிக்கடி நிகழ்ந்து வந்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தமது வாதத்தின்போது குறிப்பிட்டார்.
இந்தச் சூழ்நிலை பாலியல் உறவு வைத்துக்கொள்ளும் அளவுக்குப் பின்னர் மேம்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உயர்நிலை 4ல் படித்து வந்த அந்தப் பெண்ணை இவ்வாண்டு ஜனவரி 25ஆம் தேதி பிற்பகல் 12.30 மணிவாக்கில் பள்ளியிலிருந்து அழைத்து வந்த ஆடவர், வீட்டுக்குச் செல்வதற்குப் பதில் அட்மிரல்டி டிரைவ்வில் உள்ள பலமாடி கார் நிறுத்துமிடத்திற்கு தமது வாகனத்தை ஓட்டிச் சென்றார்.
அந்த இடத்தை அடைந்ததும் வாகனத்தின் பின்னிருக்கைக்கு இருவரும் மாறினர். அப்போது அந்த ஆடவர் பாதுகாப்பற்ற பாலியல் உறவில் ஈடுபட்டார்.
பிற்பகல் 2 மணிவாக்கில் அந்தப் பகுதியில் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் அவ்விருவரையும் கண்டார்.
அதிகாரியைப் பார்த்த இருவரும் அவசர அவசரமாக உடைகளை மாட்டிக்கொண்டனர் என்று நீதிமன்றத்தில் விவரிக்கப்பட்டது.