சிங்கப்பூரின் வடக்குப் பகுதியில் உள்ள ஓர் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாம் ஒன்றில் தமது சக முகாம் தோழியை பயமுறுத்தும் நோக்கத்தில் அவர் குளிக்கும்போது 19 வயது இளையர் ஒருவர் தமது கைபேசி கேமராவை அவர் குளிக்கும் திசையை நோக்கி காட்டினார்.
குற்றம் புரிந்தவருக்கு இப்போது 20 வயதாகிறது. பெண்ணை மானபங்கப்படுத்திய அவர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
சம்பவம் நடந்தபோது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் 19 வயது நிரம்பியிருந்ததால், தடை உத்தரவு காரணமாக குற்றம் புரிந்தவரின் பெயரையும் பள்ளியின் பெயரையும் வெளியிட முடியாது. குற்றம் நடந்தபோது அந்த இளையர் அப்பள்ளியில் பயிலவில்லை என்றும் அறியப்படுகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி, சீருடைப் பிரிவு ஒன்று தனது இரவு நேர முகாமை நடத்திக்கொண்டிருந்தது. அப்போது பின்னிரவு 2.20 மணிக்கு அந்தப் பெண் குளித் துக்கொண்டிருக்கும்போது, இளையர் கைபேசி கேமராவை குளியல் அறைக்கு மேலே தூக்கிக் காண்பித்தார். அதைப் பார்த்த பெண் கூச்சலிட்டபோது, இளையர் தப்பித்தார்.
முகாமின் பாதுகாப்பு அதிகாரியிடம் பெண் சம்பவம் பற்றி தெரிவித்த சமயத்தில் இளையர் தாம் அவ்வாறு செய்ததை ஒப்புக்கொண்டார். அந்த கைபேசியில் காணொளி எதுவும் பதிவாகவில்லை. $10,000 பிணையில் விடுவிக்கப்பட்ட இளையரின் தண்டனை விதிப்பு ஜனவரி மாதம் 21ஆம் தேதி அறிவிக்கப்படும்.