ஜூரோங் பாயிண்ட் கடைத்தொகுதியில் நிறுத்தப்பட்ட காரில் ஏற்பட்ட கீறல்கள் குறித்து போலிஸ் புலனாய்வு மேற் கொண்டு வருகிறது. ஸ்டோம்ப் வாசகர் கிறிஸ் என்பவர் இம்மாதம் 19ஆம் தேதி ஜூரோங் பாயிண்ட் கடைத்தொகுதி யின் புதிய இணைப்புக் கட்டடத்தில் மாலை 6.30 மணிக்கு காரை நிறுத்திவிட்டு தம் மகனை அங்குள்ள வகுப்புக்கு அழைத்துச் சென்றார். அப்போது அவருடன் இரு இளம் பிள்ளைகள் இருந்தனர்.
“நான் திரும்பி வந்து பார்க்கும்போது எனது காரில் கீறல்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றேன் (படம்). எனது காருக்குப் பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரின் ஒட்டுநர்தான் காரைக் கீறியிருக்க வேண்டும். கார் நிறுத்தப் பட்டவுடன் காரிலிருந்து இறங்குவதற்கு எனது மகன் கதவைத் திறக்கும்போது, கதவு, பக்கத்தில் குறிப்பிட்ட இடத்தைத் தாண்டி நிறுத்தப்பட்டிருந்த காரில் பட்டுவிட்டது.
“காருக்குள் ஆள் இருப்பதை நான் உணரவில்லை. பிள்ளைகளுடன் காரை விட்டு புறப்படும்போதுதான், அந்தக் காரின் ஓட்டுநரான பெண் ஒருவர் தனது காரின் உட்புறத்தி லிருந்து காரை உற்றுநோக்குவதைப் பார்த்தேன். நான் அவசரமாக செல்ல வேண்டியிருந்ததால், அவரிடம் மன்னிப்பு கேட்க முடியவில்லை,” என்றார் திரு கிறிஸ்.
தனது காரில் இரு நீளமான கோடுகள் கீறப்பட்டிருப்பது பற்றி திரு கிறிஸ் அதே நாளில் போலிசில் புகார் கொடுத் தார். திரு கிறிஸிடமிருந்து புகார் கிடைத்திருப்பதை உறுதி செய்த போலிசார், புலனாய்வை மேற்கொண்டுள்ளனர்.