சிறையிலிருந்து விடுதலையாகி ஒரே ஆண்டில் இரு சிறுவர்களை மானபங்கம் செய்த ஆடவருக்கு நேற்று ஏழு ஆண்டு தடுப்புக்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
இதற்கு முன் பாலியல் குற்றங்கள் தொடர்பில் 53 வயது செயது சுலைமான் மைதீன் பிள்ளை மீதிருந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு இரண்டு முறை சீர்திருத்தப் பயிற்சிக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்பட்டது.
மீண்டும் மீண்டும் குற்றம் புரிவோருக்குத் தரப்படும் இத்தண்டனை, நன்னடத்தை கருதிக் குறைக்கப்படாது. இதன்படி அதிகபட்சமாக 14 ஆண்டுகள் வரை சீர்திருத்தப் பயிற்சிக்கு அனுப்பப்படலாம்.
அவ்வாறு முதல் முறை சீர்திருத்தப் பயிற்சிக்கு செயது 1999ல் அனுப்பப்பட்டதாகவும் ஐந்தாண்டுச் சிறைத் தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டதாகவும் அறியப்படுகிறது.
அதைத் தொடர்ந்து 2012ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக செயது சீர்திருத்தப் பயிற்சிக்கு அனுப்பப்பட்டதாகவும் சென்ற ஆண்டு மார்ச் மாதத்தில் விடுதலையானதாகவும் கூறப்பட்டது.
கடைசியாக செயது இவ்வாண்டு முற்பாதியில் மீண்டும் குற்றங்கள் புரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
‘ஃபார் ஈஸ்ட் பிளாசா’வில் துப்புரவாளராக இருந்த செயது, பேருந்துப் பயணத்தின்போது ஒரு சிறுவனிடம் பேச்சு கொடுத்து அவனைத் தன் அருகில் அமரச் சொன்னதாகவும் சிறுவனுக்கு இரண்டு வெள்ளி கொடுத்ததாகவும் கூறப்பட்டது. தொடர்ந்து சிறுவனின் தொடையை வருடியதுடன் அவனது தோள்மீது கைபோட்டதாகவும் சொல்லப்பட்டது.
இன்னொரு சம்பவத்தில் செயது வேறு ஒரு சிறுவனையும் அதே போல் பேருந்தில் மானபங்கம் செய்ததாகக் கூறப்பட்டது.
மானபங்கம் தொடர்பில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்தாண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் அல்லது பிரம்படியும் விதிக்கப்படலாம்.
செயதின் வயது ஐம்பதுக்கு மேல் இருப்பதால் பிரம்படித் தண்டனை விதிக்கப்படவில்லை.