நாட்டின் தொழில்துறை உற்பத்தி இரு மாதங்களாக ஏறுமுகமாக இருந்து நவம்பர் மாதத்தில் 9.3% சரிந்தது. மின்னணுவியல் உற்பத்தித் துறையே இச்சரிவுக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
இதன் தொடர்பில் பொருளியல் மேம்பாட்டுக் கழகம் நேற்று வெளியிட்ட தகவலின்படி, சென்ற ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு நவம்பரில் இந்தச் சரிவு ஏற்பட்டிருந்தது.
உயிரியல் மருத்துவத் துறையைத் தவிர்த்துப் பார்த்தால் உற்பத்தி 9% சுருங்கியது.
நவம்பர் மாதத்திற்கான உற்பத்தி 0.8% வீழ்ச்சி காணும் என்று புளூம்பெர்க் ஆய்வாளர்கள் கணித்திருந்தனர். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்புக்கும் அதிகமான அளவில் சரிவு ஏற்பட்டுள்ளதை நேற்று வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.
ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் அனைத்து துறைகளிலும் மின்னணுவியல் உற்பத்தித் துறையே பெரும் வீழ்ச்சி கண்டது.
சென்ற மாதம் அத்துறை 20.9% சரிந்தது.
தகவல்தொடர்புகள் வாடிக்கையாளர் மின்னணுவியல் துறையில் 29.8% வளர்ச்சியும் தரவுச் சேமிப்புத் துறையில் 23.1% வளர்ச்சியும் பதிவாகியிருந்த நிலையிலும் மின்னணுவியல் உற்பத்தித் துறையில் இந்தப் பெருமளவு சரிவு ஏற்பட்டது.
மொத்தத்தில் கடந்த 11 மாதங்களையும் சென்ற ஆண்டின் அதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 7.8% சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டின் மருத்துவச் சாதனங்களை ஏற்றுமதி செய்வதன் தேவை குறைந்ததால் மருத்துவத் தொழில்நுட்பத் துறையும் 4.3% சரிந்தது.
இதற்கிடையே நுண்ணியல் பொறியியல் உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு ஒப்பிடுகையில் 9.7% உயர்ந்தது.
போக்குவரத்துப் பொறியியல் உற்பத்தியும் சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.1% உயர்வு கண்டது. வர்த்தக விமானச் சேவைகள் கூடுதலான பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளை நாடியதால் ஆகாயத் துறைக்கான உற்பத்தி உயர்ந்து அது போக்குவரத்துப் பொறியியலுக்குக் கைகொடுத்ததாக கூறப்படுகிறது.