உணவு தயாராகும் இடம் சரியாகப் பராமரிக்கப்படாமல் சுத்தமாக இல்லாத காரணத்தால் ‘ஒபேயட் ஹோல்டிங்ஸ்’ நிறுவனத்திற்கு நேற்று $6,000 அபராதம் விதிக்கப்பட்டது.
சமைத்த உணவைத் தயார் செய்யும் இந்நிறுவனம் அதன் சமையல் இடத்தைச் சுகாதாரமான முறையில் பராமரிக்கவில்லை என்பதை வழக்கமான சோதனைகளின்போது சிங்கப்பூர் உணவு அமைப்பு கண்டறிந்தது.
இச்சோதனைகள் செப்டம்பர் 5, நவம்பர் 15 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டன.
சமையல் இடத்தில் அதிக அளவிலான கரப்பான்பூச்சிகள் காணப்பட்டதுடன் உடைந்த தரை ஓடுகள், ஈக்கள், எறும்புகள் போன்றவற்றின் ஆக்கிரமிப்பு ஆகியனவும் இருந்ததாக அமைப்பு கூறியது.
அத்துடன் பானைகளில் இறந்த கரப்பான்பூச்சிகளின் உடலும் அடுப்பின் மேல் கரப்பான்பூச்சி முட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. பங்ளாதேஷை சேர்ந்த ஒபேதூர் ரஹ்மான் இந்த நிறுவனத்திற்கு உரிமையாளர் என்று கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்தது.