சிங்கப்பூரில் உள்ள வீடு புதுப்பிப்பு நிறுவனங்களின் கட்டணங்களை ஒப்பிட்டுப்பார்க்கும் வசதியைக்கொண்ட இணையத் தளமான ஐகம்பேர் டாட் எஸ்ஜி (icompare.sg) என்னும் இணையத் தளத்தில் பதிவுசெய்துள்ள நிறுவனங்களின் 8,500 வாடிக்கையாளர்களின் தரவுகள் ‘டார்க்வெப்’ இணையத்தில் கசிந்துள்ளன.
ஐகம்பேர் இணையத் தளம் வீட்டுக்கடன், வீடு மாற உதவும் போக்குவரத்துச்சேவை, திருமணத்திற்குப் படம் எடுப்பது போன்ற பல சேவைகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த இணையத்தில் மட்டும் வீடு புதுப்பிப்பு, வடிவமைப்பு போன்ற சேவைகள் சார்ந்த பயனாளர்கள் அல்லது வாடிக்கையாளர்களின் தரவுகள் மட்டும் கிட்டத்தட்ட 102,000 பத்திகளைக் கொண்ட தகவல்கள் டார்க்வெப் இணையத்தளம் மூலம் கசிந்துள்ளன.
ஸ்டைலெஸ் டாட் எஸ்ஜி (stylez.sg) என்னும் நிறுவனத்தால் ஐகம்பேர் டாட் எஸ்ஜி இணையத்தளம் நடத்தப்பட்டு வருகிறது.
ஐகம்பேர் இணையத் தளத்தில் தரவுக் கசிந்துள்ள சம்பவம் குறித்து ஸ்டைலெஸ் டாட் எஸ்ஜி நிறுவனத்தின் நிர்வாகிகள் அறிந்திருக்கவில்லை. ஐகம்பேர் இணையத்தளம் வாடகைக்கு எடுக்கப்பட்ட இணையக் கட்டமைப்புக் கணினியில் இயங்குவதாகவும் இது குறித்து அந்த நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் ஸ்டைலெஸ் டாட் எஸ்ஜி நிறுவனத்தின் மேலாளர் ஒருவர் தெரிவித்தார்.
கசிவான தரவுகளின் இணைய முகவரி ஒன்று இந்த ஆண்டு ஜூன் மாதம், இணையவாசிகள் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளும் இணையம் ஒன்றில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
கசிந்துள்ள தரவுகளில் அடையாள அட்டை எண், மறைசொல், வங்கி தொடர்பான முக்கிய தகவல்களடங்கிய தரவுகள் இல்லை.
அவற்றில் அலுவலகம் மற்றும் இணைய முகவரி, கைத்தொலைபேசி எண்கள், வீடு புதுப்பிப்புப்பணிக்கான கட்டண விவரப் பட்டியல்கள், வாடிக்கையாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகள் போன்றவை அடங்கும்.
அவை 2009 முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலான வாடிக்கையாளர் தரவுகள் என்று கூறப்படுகிறது.
‘டார்க்வெப்’ இணையத் தளத்தில் மேலும் பல தரவுகளும் வெளியிடப்பட்டிருந்தன.
அவை நெட்ஃபிளிக்ஸ் மறைச்சொற்கள், அமெரிக்க ராணுவ கப்பல்கள், துருக்கி நாட்டின் 49 மில்லியன் பேரின் தேசிய அடையாள அட்டை எண்கள் போன்றவையும் வெளியிடப்பட்டிருந்தன.
பொதுவாக இணையச் சொத்துகளைப் பாதுகாப்பதில் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் அதிக அக்கறை காட்டுவதில்லை என்று கூறப்படுகிறது.
இதுபோன்று இணையத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பின்னர் தான் அவர்கள் இணையப் பாதுகாப்பு அம்சங்களில் கவனம் செலுத்துகின்றனர் என்று கூறப்படுகிறது.