தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஸ்கூட் விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்து அசத்திய விமானி சரவணன் அய்யாவு

2 mins read
eaca8ba5-fa7f-4d0a-8797-d6471064df5c
தமிழ் அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது குறித்து தான் பெருமிதம் அடைவதாக ஸ்கூட் நிறுவனம் தெரிவித்தது. படம்: இணையம் -

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்கூட் விமானம் ஒன்று கடந்த வாரம் சென்னையிலிருந்து சிங்கப்பூருக்குப் பறந்துகொண்டிருந்தது.

அப்போது அதிலிருந்த தமிழ்ப் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், எவ்வளவு உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறோம், விமானம் சிங்கப்பூரில் தரையிறங்கும் நேரம், தற்போதைய வானிலை குறித்த தகவல்கள் தமிழில் ஒலித்தன. இதனைக் கேட்ட தமிழ்ப் பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

நடுவானில் பறந்துகொண்டிருந்த ஸ்கூட் விமானத்தில் கேட்ட அந்த தமிழ் அறிவிப்பு பின்வருமாறு, "வணக்கம், நான் உங்கள் விமானி சரவணன் அய்யாவு பேசுகிறேன். தற்போது நாம் 41,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறோம். இன்னும் சிறிது நேரத்தில் சிங்கப்பூரில் விமானத்தைத் தரையிறக்குவதற்கான ஏற்பாடுகள் துவங்க உள்ளன. சிங்கப்பூர் நேரப்படி 7.40க்கு அங்கு தரையிறங்குவோம்.

"சிங்கப்பூர் நேரத்தோடு ஒப்பிடும்போது சென்னை 2.30 மணி நேரம் பின்னால் உள்ளது. சிங்கப்பூரில் வானிலை மேகமூட்டமாக உள்ளது. அங்கு தற்போதைய வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ்," என்று பேசிக்கொண்டே மேற்கூறியவற்றை அழகாக ஆங்கிலத்திலும் அப்படியே மொழிபெயர்த்து சொன்னார் விமானி சரவணன் அய்யாவு.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஸ்கூட் நிறுவனம், "விமானம் தரை இறங்கும் முன்னர் வழங்க வேண்டிய அறிவிப்பை நான்கு மொழிகளில் முன்கூட்டியே ஒலிப்பதிவு செய்து அறிவிப்பது கடினம். இதனிடையே, விமானி சரவணன் அய்யாவு சிறந்த தமிழ்ப் படைப்பாளி. எனவே அவரது கோரிக்கையை ஏற்று தமிழில் அறிவிப்பு அளிக்க அனுமதி அளித்தோம். அதற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது," என பெருமிதம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்