உலகத்தின் பல இடங்களில் இன, மதக் கலவரங்கள் தலைவிரித்தாடுகின்றன. ஆனால் சிங்கப்பூரில் வாழும் பல இன மக்களாகிய நாம் ஒற்றுமையுடனும் அமைதியுடனும் வாழ்ந்து வருகிறோம்.
இந்த ஒற்றுமையும் அமைதியும் எப்போதும் தொடரும் என்று நாம் அசட்டையாக இருந்துவிடாமல் அதனைத் தொடர்ந்து கட்டிக்காக்க வேண்டும் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் (படம்) தனது புத்தாண்டுச் செய்தியில் வலியுறுத்தினார்.
இந்தப் புத்தாண்டு அமைதியையும் முன்னேற்றத்தையும் தரும் ஆண்டாக அமைய வேண்டும் என அதிபர் ஹலிமா யாக்கோப் சிங்கப்பூரர்களுக்கு காணொளி மூலம் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்துக்கொண்டார்.
சமூக ஒருங்கிணைப்பைக் கட்டிக்காத்து வருவதற்கான முயற்சிகளுக்குக் கைகொடுத்து வரும் சமய, சமூகத் தலைவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார். இருநூற்றாண்டு கொண்டாட்டம், இஸ்தானாவின் 150வது ஆண்டு விழா என இந்த ஆண்டு சிங்கப்பூருக்கு பரபரப்பான ஆண்டாகவும் நிகழ்ச்சிகள் நிறைந்த ஆண்டாகவும் அமைந்தது.
நமது நாடு அண்மைய காலத்தில் சுதந்திரம் பெற்ற நாடாக இருந்தபோதிலும் பொருளியல், சமூக ஒற்றுமை போன்றவற்றில் நாம் சாதித்தவற்றை எண்ணி பெருமைகொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மக்கள் தங்களின் தனிப்பட்ட அடையாளத்தை வழங்கும் வட்டத்திற்குள் தங்களை அடைத்துக்கொண்டுவிட்டால் அவர்களின் வரவேற்பைப் பெறும் நோக்கத்துடனான அரசியல் தலைதூக்கி மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது என்றும் அதிபர் அறிவுறுத்தினார்.