இந்தோனீசியா தனது கொமோடோ விமான நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பை சாங்கி குழுமத்திற்கு வழங்கியுள்ளது. இதனால் அடுத்த ஆண்டு முதல் அந்நாட்டில் உள்ள மேலும் பல விமான நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது. கொமோடோ விமான நிலைய நிர்வாகம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு பிடி கார்டிக் ஏரோ சர்வீசஸ் மற்றும் சாங்கி ஏர்போர்ட் இண்டர்நேஷனல் பிரைவேட் லிமிட்டெட் ஆகிய இரு நிறுவனங்களை உள்ளடக்கிய சிங்கப்பூர் சாங்கி குழுமத்தால் நிர்வகிக்கப்படும்.
விமான நிலையத்தின் நிர்வாகப் பொறுப்பு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படுவது இதுவே முதல் முறை என்று இந்தோனீசியாவின் நிதி அமைச்சர் முல்யாணி இந்திராவதி தெரிவித்தார்.
சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் தீவான லபுவான் பாஜோ நகரில் இந்த விமான நிலையம் அமைந்துள்ளது.
இந்த விமான நிலைய மேம்பாட்டுக்காக இந்தோனீசியா வரும் ஐந்து ஆண்டுகளில் $116 மில்லியன் செலவிடவுள்ளது.
பெரிய விமானங்களைக் கையாளும் விதத்தில் விமான ஓடு பாதை நீட்டிக்கப்படும் என்று அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சர் புடி கர்யா சுமாடி தெரிவித்தார்.