மூத்த குடியிருப்பாளர்களுக்குச் சட்ட விவகாரங்கள் குறித்து உதவி நல்கி வந்த அடித்தள அமைப்பு, இனி அவர்களின் சுகாதாரத் தேவைகள் தொடர்பிலும் கைகொடுக்கவுள்ளது. இதன்படி பயா லேபார் வட்டாரத்தில் வசிக்கும் முதியவர்களுக்காக மருத்துவப் பரிசோதனைகள், சுகாதாரப் பேச்சுகள் போன்றவை ஏற்பாடு செய்யப்படும்.
குடியிருப்பாளர்களிடமிருந்து திரட்டப்பட்ட கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அல்ஜுனிட் குழுத்தொகுதிக்கு அடித்தள அமைப்பு ஆலோசகராக உள்ள திரு அலெக்ஸ் யோ, 40, தெரிவித்தார்.
“வட்டாரவாசிகள் தங்களுக்குச் சுகாதாரம்தான் மிக முக்கியம் என்று கூறுவதால், அதற்கு ஏற்ப சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத் திட்டங்களை நாங்கள் வழங்குவோம்,” என்று நேற்று திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார் திரு யோ.
திட்டத்தின் முதல் கட்டம் சட்டம் தொடர்பானது. 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய இதில், சட்டபூர்வ அதிகாரப் பத்திரம் (எல்பிஏ) மற்றும் உயில்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படுவதுடன் அவற்றை எழுதவும் உதவி கிடைக்கும். இதன் தொடர்பில் இலவச சட்ட ஆலோசனையும் சேவை வழங்கும் வழக்கறிஞரான திரு யோ, கிட்டத்தட்ட 510 குடியிருப்பாளர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் உதவியுள்ளார்.
இரண்டாம், மூன்றாம் கட்டங்களில் மூளை மற்றும் எலும்பு தொடர்பான சுகாதார விழிப்புணர்வு அடங்கும். இதற்காக மருத்துவ சோதனைகள், சுகாதாரப் பேச்சுகள், கண்காணிப்புத் திட்டங்கள் நடப்புக்கு வரவுள்ளன.
பயா லேபார் வட்டாரத்தில் 26 விழுக்காட்டினர், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் முதுமை மறதி நோய், எலும்பு தொடர்பான நோய் போன்ற பிரச்சினைகளை இவர்கள் எதிர்நோக்குகின்றனர் என்றும் குறிப்பிட்ட திரு யோ, அவர்களுக்கு இத்திட்டம் பெரிதும் பலனளிக்கும் என்றார்.
மக்கள் கழக நிர்வாகக் குழுத் தலைவருக்குச் சிறப்பு ஆலோசகரும் முன்னாள் அமைச்சருமான லிம் பூன் ஹெங், நேற்றைய நிகழ்ச்சியில் பங்கேற்றார். வரும் பொதுத் தேர்தலில் திரு லிம் ஆதரவு அளிப்பாரா என்று கேட்டதற்கு திரு யோ பதிலளிக்க மறுத்துவிட்டார்.