மூத்த குடிமக்களுக்கென செம்பவாங் பகுதியில் இயங்கி வரும் பராமரிப்பு நிலையத்தைப் புதுப்பிப்பதற்காக நேற்று நடந்த நிகழ்ச்சியில் $300,000க்கு மேலாக நிதி திரட்டப்பட்டது.
‘சாஃப்ரா ஜூரோங்’கில் நேற்று நடைபெற்ற நிதி திரட்டு நிகழ்ச்சியில் கேன்பரா ஸ்திரீட்டில் அமைந்துள்ள ‘புலோசம்ஸ் சீட்ஸ்’ நிலையம் அதன் வசதிகளை மேம்படுத்திக்கொள்வதற்காக இத்தொகையைத் திரட்டியுள்ளது.
நிலையத்தில் உடற்பயிற்சிக் கூடம், சிகிச்சை அறைகள், உணவு தயாரிப்புப் பகுதிகள் எனப் பற்பல புதிய வசதிகளை அமைத்திட இத்தொகை உதவும் என்று கூறப்பட்டது.
அடுத்தாண்டு முதற்பாதியில் புதுப்பிப்புப் பணிகளைத் தொடங்க வுள்ள நிலையம், $400,000ஐ திரட்ட முயற்சி செய்து வருகிறது.
இந்நிலையம் அதன் தரமான இல்லம் மற்றும் நிலையம் சார்ந்த திட்டங்களின் வழி முதியவர்களுக்கிடையே நட்புறவை வலுப்படுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளது.
நிலையத்தின் தொண்டூழியரான திருவாட்டி மேரி ராஜேஸ்வரி சிங்காரம், 62, வாரத்தில் ஆறு நாட்களை இங்குக் கழிக்கிறார்.
சமையல் குறிப்புகளைப் பகிர்ந்துகொள்வது முதல் ‘தைச்சி’ வகுப்புகளில் உதவுவது வரை சேவையாற்றி வரும் திருவாட்டி ராஜேஸ்வரி உட்பட பல முதியவர்கள், நிலையத்தின் புதுப்பிப்பு வசதிகளை இனிப் பயன்படுத்திப் பலனடையலாம் என்று கூறப்பட்டது.
முதியவர்கள் உட்பட கிட்டத்தட்ட 1,000 பேர் கலந்துகொண்ட நிதி திரட்டு நிகழ்ச்சியில் கல்வி அமைச்சரும் செம்பவாங் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு ஓங் யி காங், சிறப்பு விருந்தினராக வருகை அளித்திருந்தார்.
நிகழ்ச்சியில் மூன்று பாடல் அங்கங்களைப் படைத்ததுடன் ‘ஷெங் சியோங்’ ஆதரவுடன் $100,000 தொகையையும் திரட்ட அவர் உதவினார்.