கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள், சாலையின் எதிர்ப்புறத்திலிருந்து தடுப்பைத் தாண்டி பறந்து வந்து ஒரு காரின் அடியில் சிக்கியது. ஏற்கெனவே தீப்பற்றியிருந்த மோட்டார்சைக்கிளால் காரும் தீப்பிடித்துக்கொண்டது.
இங் நியோ அவென்யூவில் நேற்று முன்தினம் நடந்த இந்தச் சம்பவத்தில், காரில் இருந்த வயதான தம்பதி உயிர் தப்பினர்.
காரை ஓட்டிக்கொண்டிருந்த ஓய்வுபெற்ற லாரி ஓட்டுநர், திரு டான் செங் வாட், 72, தீப்பற்றியதும் காரை நிறுத்திவிட்டு சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் தம் மனைவியைக் காப்பாற்ற விரைந்தார்.
தம் ‘டொயோட்டா ரஷ்’ காரிலிருந்து வெளியேறி பயணி இருக்கையில் இருந்த 68 வயதான திருவாட்டி கூ ஜியொக் ஹுவாவை வெளியே இழுத்தார்.
தீ கொழுந்துவிட்டு எரிய, திரு டான் அருகில் இருந்த நடை பாதைக்குத் தம் மனைவியைக் கொண்டு வர முயன்றார்.
அருகில் இருந்த சில வழிப்போக்கர்கள் இதைப் பார்த்துவிட்டு அவருக்கு உதவிக்கரம் நீட்டினர்.
சம்பவம் குறித்துத் தங்களுக்கு மாலை 6.20 மணியளவில் தகவல் கிடைத்ததாக போலிசும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
ஒரு தண்ணீர் பீய்ச்சியடிக்கும் சாதனம் மற்றும் காற்றழுத்த நுரைப்பை ஒன்றின் உதவியுடன் நெருப்பு அணைக்கப்பட்டது.
சிறு காயங்களுடன் 23 வயது மோட்டார்சைக்கிளோட்டி தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டது.
இதன் தொடர்பில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் நேற்று பேசிய திருவாட்டி கூ, விபத்து நடந்த சமயத்தில் தான் அதிர்ச்சியில் உறைந்துவிட்டதாகவும் பதறிவிட்டதாகவும் சொன்னார்.