இங்கு மின்னிலக்கச் சேவை வழங்கி வரும் வெளிநாட்டு நிறுவனங்கள், பொருள் சேவை வரிக்காகப் (ஜிஎஸ்டி) பதிவு செய்துகொள்ளவேண்டும் என்று சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் புதிய விதியை அறிவித்துள்ளது. இந்நிலையில், ஜனவரி 1 முதல் அச்சேவைகளைப் பயன்படுத்தும் சிங்கப்பூரர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
கைபேசி செயலிகள், மின்னூல்கள், திரைப்படங்கள், செய்தித்தாள், சஞ்சிகைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை, விளையாட்டுகள், மென்பொருள்கள், இணையத்தில் தகவல் சேமிப்பு (கிளவுட்) போன்ற மின்னிலக்கச் சேவைகள் இனி ஜிஎஸ்டிக்கு உட்படுத்தப்படும். ஆஸ்திரேலியா, ஜப்பான், நியூசிலாந்து, தென்கொரியா போன்ற நாடுகள் இதே போன்ற விதிமுறைகளை 2015ஆம் ஆண்டு முதலே பின்பற்றி வருவதாகக் கூறப்படுகிறது.